பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும் கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டியில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் இக்கிராமத்திலும், அருகில் உள்ள கொள்ளுகுடிபட்டியிலும்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டியில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் இக்கிராமத்திலும், அருகில் உள்ள கொள்ளுகுடிபட்டியிலும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதை இக்கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்து கொண்டாடுவதே தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சம். ஆனால், வேட்டங்குடிபட்டியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளதால் இந்த கிராமத்திலும், அருகில் உள்ள கொள்ளுகுடிபட்டி கிராமத்திலும் பறவைகளின் அமைதி கருதி இன்றளவும் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
நூற்றுக்கும் மேல் வீடுகளைக் கொண்ட இக்கிராம மக்கள் நெடுங்காலமாகவே பறவைகளுக்காக கண்மாயில் மீன்குஞ்சு வளர்ப்பது, கிராமத்துக்குள் அதிக சத்தம் எழுப்பாமல் வாகனங்களில் செல்வது, பறவைகளுக்காக கண்மாயில் ஆடு, மாடுகளைக் கூட குளிப்பாட்டாதது என பறவைகளை பாதுகாத்து வருகின்றனர். இதனால் வனத்துறையினர் மூலம் இந்த இரண்டு கிராம மக்களுக்கும் தீபாவளியின்போது இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொள்ளுகுடிபட்டியைச் சேர்ந்த காயத்திரிபூபதி கூறியது:
எங்கள் பள்ளிப் பருவம் தொட்டே பறவைகளுடன் பாசத்துடன் பழகி வருகிறோம். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் பல்வேறு நாட்டு பறவைகள் சீசன் தொடங்கியவுடன் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து செல்லும். இப்பறவைகளை காண சுற்றுவட்டாரப் பகுதி, வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்வர். பறவைகள் ஆராய்ச்சிக்காக கல்லூரி மாணவர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறோம். மேலும் எங்கள் கிராமத்தில் பறவைகளினால் காற்று, மாசுபாடும் தடுக்கப்படுகிறது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.