சிறைக் கைதிகள் விவகாரம்: கூடுதல் டிஜிபி நியமனம்
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம் குறித்த வழக்கில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிறைத் துறை கூடுதல் டிஜிபியை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம் குறித்த வழக்கில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிறைத் துறை கூடுதல் டிஜிபியை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம், கண்ணியம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
மூத்த வழக்குரைஞர் நியமனம்: இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை 157 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 22 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞர் வைகையை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் கோரும் ஆவணங்களை வழங்கவும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.