முகப்பு
தமிழ்நாடு

மாணவர்கள் அப்துல் கலாமை முன்மாதிரியாகக் கொண்டு முன்னேற வேண்டும்

பள்ளி மாணவர்கள், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

Updated On : 9 அக்டோபர் 2018, 1:32 am IST
ஒசூரில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுமிக்கு பரிசுகளை வழங்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பகிர்:


பள்ளி மாணவர்கள், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சி வார நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 
அப்போது ஆளுநர் பேசியது: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மிக எளிமையாக வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற போது 2 சூட்கேஸ் உடைமைகளை குடியரசு மாளிகைக்குக் கொண்டு சென்றார். அதில் ஒரு சூட்கேஸில் புத்தகங்கள், மற்றொன்றில் அவர் அணியும் உடைகள் இருந்தன. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததும் அதே 2 சூட்கேஸ்களில் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றார். அந்த அளவுக்கு மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அப்துல் கலாம். மாணவர்கள் அவரை ரோல் மாடலாகக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். 
இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பாண்டியது பேசியது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனைப் படைத்து வருகிறது. இந்தியாவில் முதலில் ஒரு டி.வி. சேனல் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் 832 டி.வி. சேனல்கள் உள்ளன. ஆன்மிகம், விளையாட்டு, குழந்தைகளுக்கான சேனல், செய்தி சேனல் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் ஆகும். அதுமட்டுமின்றி, கேரள வெள்ளத்தில் அந்த மாநில அரசுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கைகளை வழங்கியது இஸ்ரோ. செல்லிடப்பேசி போன்ற அதிவேக இணையதள சேவைக்கு இஸ்ரோவின் பல்வேறு செயற்கைக்கோள்கள் பயன்பட்டு வருகின்றன. கஞ்சா எந்தப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது என்பதையும் துல்லியமாகக் கண்டறியக் கூடிய தொழில் நுட்பம் நம்மிடம் உள்ளது. பூமிக்கு அருகில் உள்ள கிரகம் செவ்வாய். இந்தக் கிரகத்திற்கு 51 முறை உலக அளவில் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 21 முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது என்றார். 
இந்த விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் வெங்கட்ராமன், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், அதியமான் பொறியியல கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.