முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக அமைப்பதுதான் பலமான கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக அமைக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Updated On : 14 பிப்ரவரி 2019, 1:47 am IST
மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியை தொடங்கி வைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
பகிர்:


தமிழகத்தில் பாஜக அமைக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
 பாஜக மகளிரணி சார்பில்,  மீண்டும் மோடி- வேண்டும் மோடி என்ற பெயரில் மத்திய அரசின் சாதனை விளக்க இரு சக்கர வாகனப் பேரணி மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.  தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருந்து தொடங்கிய இப்பேரணியை தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். பாஜக மகளிரணி மாநிலத் தலைவர் ஏ.ஆர். மகாலெட்சுமி,  மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன், நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 இந்த பேரணி தல்லாகுளம்,  தமுக்கம் மைதானம், காந்தி நினைவு அருங்காட்சியகம், ஆட்சியர் அலுவலக சாலை, சாத்தமங்கலம், கே.கே.நகர் வழியாக உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகம் அருகே நிறைவு பெற்றது. மத்திய பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பேரணியின்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
 முன்னதாக, தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
 பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை மற்றும் திருப்பூர் வருகைக்குப் பிறகு தமிழக பாஜகவுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளனர். இது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருப்புக் கொடி காட்டுபவர்களையும், எதிர்வினையாற்றுவோரையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ் அணியில் இல்லாத கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த தேர்தலில் பாஜக அணி தான் பலமான கூட்டணியாக இருக்கும். விரைவில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும்,  யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். 
 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக, வைப்புத் தொகையை இழந்தது. ஆகவே, அக் கட்சியை டெபாசிட் இழந்த கட்சி என்ற கூற முடியுமா?. ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நோட்டாவுக்கு மேல் வாக்குகள் பெறுவது பெருமை அல்ல. தமிழகத்தில் பாஜக எந்த அளவுக்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பது வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.