அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வராவிட்டாலும் பரவாயில்லை: அமைச்சர் டி.ஜெயக்குமார்
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; அதே வேளை வராவிட்டாலும் பரவாயில்லை என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; அதே வேளை வராவிட்டாலும் பரவாயில்லை என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக கூட்டணி குறித்து கோபம், விரக்தியின் உச்சத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். பாஜக இந்துத்துவா கட்சி என்று கூறும் திமுகவினர், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து அரசியல், அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக அளவில் பயனடைந்தனர். தற்போது, அதையெல்லாம் மறந்துவிட்டு விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழக மக்கள் எங்கள் கூட்டணியை முழுமையாக நம்புகிறார்கள்.
அதிமுகவைப் பொருத்தவரை கூட்டணியின் கதவுகள் திறந்து உள்ளன. அந்த வகையில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; அதே வேளை வராவிட்டாலும் பரவாயில்லை. அது அவர்களின் முடிவு என்றார்.
ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேரை விடுவிக்க கோரி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்த விவகாரத்தில் விரைவாக முடிவெடுக்குமாறு ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது. அதேவேளையில், அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் இதுவரை நிராகரிக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.