சிறை அதிகாரிகள் இடமாற்றம் : ஆவணங்களை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவு
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம், கண்ணியம் உள்ளிட்டவைகளை பாதுகாப்பது தொடர்பான வழக்கில்,
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம், கண்ணியம் உள்ளிட்டவைகளை பாதுகாப்பது தொடர்பான வழக்கில், சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளின் வாழ்வாதாரம், கண்ணியம் உள்ளிட்டவைகளை பாதுகாக்க அனைத்து
உயர்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எந்த மாதிரியான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே இந்த பணிகளை மேற்கொள்ள நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஆர்.வைகையை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இவர் சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் வழக்குரைஞர் வைகை தலைமையில் புதுச்சேரி மாநில மத்திய சிறையில் ஒரு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறைச்சாலையில் படுகாயத்துடன் கைதிகள் சிலர் அடைக்கப்பட்ட விவரங்களையும், சிறை மருத்துவமனையில் உள்ள வசதிகள் தொடர்பான விவரங்களையும் கேட்டனர். அந்த விவரங்களை பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அந்த சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குரைஞர் வைகை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வழக்குரைஞர் வைகை, சிறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை நிறுத்தி வைக்க புதுச்சேரி மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, அதனை நிறுத்தி வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் புதுச்சேரி தலைமைச் செயலாளர், சிறைத் துறை ஐ.ஜி. ஆகியோர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.