ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே லட்சியம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்று ராஷ்ட்ரீய
நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.
பொங்கலை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கோட்ட அளவிலான மாநாடு, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தென் பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் செந்தில்முருகன் வரவேற்றார்.
இதில் மோகன் பாகவத் பேசியதாவது: 1940க்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஆர்.எஸ்.எஸ். கிளை தொடங்கப்பட்டது. 1970க்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது. 2010க்குள் அனைத்து ஒன்றியப் பகுதிகளுக்கும் விரிவடைந்தது. இப்போது ஆர்.எஸ்.எஸ். தொடர்பே இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
சூரியனை வழிபடுவது, பசுவை வழிபடுவது, இயற்கையை வழிபடுவது என்பதெல்லாம் நமது தொன்றுதொட்ட பாரம்பரியம். அதை ஒட்டியே நாம் பொங்கல் திருவிழா, காணும் பொங்கல் திருவிழாக்களைக் கொண்டாடி வருகிறோம்.
இந்த விழா நேரத்தில், நமது சமுதாயத்தில் உள்ள தேவையற்ற குறைபாடுகளை நீக்க, நாட்டின் முன்னேற்றத்துக்காக நமது வாழ்க்கையை அர்ப்பணிக்க உறுதி ஏற்க வேண்டும். சமுதாயத்தில் நம்பிக்கையான நல்ல சூழலை உருவாக்குவதே நமது பணி. அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் செயல்பட்டு, நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தென் தமிழக அமைப்பாளர் செந்தில்குமார், இணை அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.