கொடநாடு விடியோ விவகாரம்: சயன், மனோஜியிடம் 11 மணி நேரம் விசாரணை
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான விடியோ விவகார வழக்கில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜியிடம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான விடியோ விவகார வழக்கில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜியிடம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை 11 மணி நேரம் விசாரணை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது. மேலும் அந்தக் கும்பல், அங்கிருந்த சில பொருள்களை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவத்துக்கு பின்னர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார்.
அதேவேளையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன், விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது மனைவி, குழந்தை விபத்தில் இறந்தனர். இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, அங்கிருந்த பொருள்களை திருடியது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் இறந்தது தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.
இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்த விடியோ காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்ட மேத்யூ சாமுவேல், அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், முதல்வர் மீது உள்நோக்கத்தோடு அவதூறு ஏற்படுத்துதல், மக்களிடம் அச்சத்தை உருவாக்குதல் ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
11 மணி நேரம் விசாரணை: இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார், புது தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து சயன், மனோஜ் ஆகியோரிடம் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கொடுத்த தகவல்களை போலீஸார் வாக்குமூலங்களாகப் பதிவு செய்தனர்.
சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் எழும்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி சரிதா முன்னிலையில் சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் திங்கள்கிழமை பொது நல ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் ஜி.எஸ். மணி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சம்பந்தப்பட்டிருப்பதாக விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வசம் உள்துறை உள்ளதால், இது தொடர்பான குற்ற வழக்கை தமிழக காவல் துறையிடமிருந்து சுதந்திரமான விசாரணை அமைப்பான மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றவோ அல்லது ஒப்படைக்கவோ உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக முதல்வரின் தொடர்பு குறித்தும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.