மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக
தமிழக மீனவர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் இரு படகுகளில் ஜனவரி 12-இல் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நெடுந்தீவு அருகில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 9 பேரையும் கைது செய்துள்ளனர்.
அதேபோல், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரும் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நிகழ்வில் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் படகு மீது இலங்கைப் படையினர் தங்களின் கடற்படைப் படகைக் கொண்டு மோதியுள்ளனர். இத்தாக்குதலில் அப்படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் இருந்த நால்வரும் கடலில் மூழ்கிவிட்ட நிலையில், அவர்களில் மூவரை மட்டும் இலங்கை படையினர் மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். கடலில் மூழ்கிய மாரிச்சாமி என்ற மீனவர் இதுவரை மீட்கப்படவில்லை. அவர் என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்வதாகவும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 47 படகுகள் விடுவிக்கப்படும் என்றும் சில நாள்களுக்கு முன்பு தான் இலங்கை அரசு அறிவித்தது.
இதனால், தமிழக மீனவர்கள் தொடர்பான இலங்கை ஆட்சியாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால், தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு இலங்கை அரசினர் மனங்களிலிருந்து அகலவில்லை என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன.
எனவே, உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் விடுவித்து சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.