தமிழக நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி வசதி தொடக்கம்
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 254 ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் உள்ள ஆயிரத்து 49 நீதிமன்றங்கள், சென்னை உயர்நீதிமன்றம், உயர்
நீதிமன்ற மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ரூ. 22 கோடியே 83 லட்சத்து 4 ஆயிரத்து 690-ஐ வழங்கியுள்ளது.
இந்நிதியின் மூலம், காணொலிக் காட்சிக்கான டிஜிட்டல் கருவிகள், விடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யும் கருவிகள் உள்ளிட்டவைகள் எல்காட் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காணொலிக் காட்சி வசதிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ பேசியது:
நீதிமன்றங்கள்தான் சாமான்ய மக்களின் உச்சபட்ச நம்பிக்கையாகத் திகழ்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வழக்குகளில் விரைவாகத் தீரப்புகளை வழங்க உதவுகின்றன. குறிப்பாக தற்போது செய்யப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகள், பிற ஊர் சிறையில் உள்ள கைதிகளின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வது, மருத்துவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உதவும். இதற்காக அவர்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக வருவதைத் தவிர்த்து காணொலிக் காட்சி வழியாக ஆஜர்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற நேர விரயம் மற்றும் பொருள் செலவு தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.
நீதிபதி டி.எஸ்.சிவஞானம் வரவேற்றார். நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நன்றி கூறினார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எஸ்.மணிக்குமார், எம்.எம்.சுந்தரேஷ், எம்.துரைசாமி, கே.கல்யாணசுந்தரம், ஆர்.மகாதேவன் மற்றும் அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.