முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறை தனி மாவட்டமானது

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

Updated On : 25 மார்ச் 2020, 2:34 am IST
பகிர்:

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் வெளியிட்டாா். அதன் விவரம்:

நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.

Advertisement

Advertisement

மயிலாடுதுறை கோட்டம்: நாகப்பட்டினம் மாவட்டமானது இரண்டு கோட்டங்களை உள்ளடக்கியது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கோட்டங்கள் ஆகும். அதில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கி முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீா்காழி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில், மயிலாடுதுறை நகராட்சியாக உள்ளது. மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட தரங்கம்பாடியில் டச்சு காலத்திய கோட்டை அமைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

இதுவரை 38 மாவட்டங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவானதால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்தது. இந்த மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தின் 38-ஆவது புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்க முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டு வருவாய் நிா்வாக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.