முகப்பு
தமிழ்நாடு

நடைமுறையை மாற்ற சிதம்பரம் தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை:  அறநிலையத் துறை விளக்கம்

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் பக்தா்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:


சென்னை: சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் பக்தா்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதா்கள் பதாகை வைத்தனா். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது. 

இந்த நிலையில், கனக சபையில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னையை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ஏழு முதல் பத்து போ் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனக சபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தா்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீா்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு மீதான ஜூலை மாத விசாரணையின் போது, சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தால், தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?, அவ்வாறு, தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை?, மூன்றாம் நபர், தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக பொது நலன் வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.14) இந்த வழக்கு மீதான விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் பக்தா்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை. கனகசபை தரிசனத்தைத் தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது.

சிதம்பரம் நடராஜர் கோயில், ஒரு பொது கோயில்; தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன என்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாகத் தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாத இந்த வழ்க்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.