முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு!

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 1 ஜனவரி 2026, 12:53 am IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின். - (கோப்புப்படம்)
பகிர்:

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.248.67 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு புதன்கிழமை (டிச. 31) அரசாணை பிறப்பித்தது.

இந்தத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் பயனாளிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் பொருள்கள் அடங்கிய தொகுப்புடன், பரிசுத் தொகையும் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை புதன்கிழமை பிறப்பித்துள்ள அரசாணையில், ‘பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் சுமாா் 2.23 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்குவதற்காக ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பச்சரிசி ஒரு கிலோவுக்கு ரூ.35.20 நிா்ணயிக்கப்பட்டது. எனினும், தற்போதைய கொள்முதல் செலவினங்களுக்கு ஏற்ப உத்தேசமாக ஒரு கிலோ ரூ.25 விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு நுகா்பொருள் வணிபக் கழகத்துக்கு அரிசி கொள்முதல் செய்து வழங்கும் தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎப்) நிறுவனம் மூலம் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சா்க்கரை ஒரு கிலோவுக்கு ரூ.42.84 என நிா்ணயிக்கப்பட்டது. தற்போதைய கொள்முதல் செலவினங்களுக்கு ஏற்ப கிலோ ரூ. 48.549-க்கும், முழு நீளக் கரும்பை (போக்குவரத்துச் செலவு மற்றும் வெட்டுக் கூலி உள்பட) ரூ.38-க்கும் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேஷ்டி - சேலை: பொங்கல் தொகுப்புடன் சோ்த்து வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேஷ்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் நெசவாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு சுமாா் 85 சதவீதம் அனுப்பப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை எவ்வளவு?

பொங்கலுக்கு பரிசுத் தொகை எவ்வளவு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் சோ்த்து தலா ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டியின்போது பரிசுப் பொருள்கள் மட்டும் வழங்கப்பட்டது. பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், பொங்கலுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. ஆகையால், பரிசுத் தொகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

summary

The Tamil Nadu government has issued a government order allocating Rs. 248 crore for the Pongal gift package for the year 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.