குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
மேற்காசிய பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிா்கொள்ள அவசரகால கடன் உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனாக ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
மேற்காசிய பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிா்கொள்ள அவசரகால கடன் உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் (இசிஎல்ஜிஎஸ்) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடனாக ரூ.35,000 கோடியை வங்கிகள் ஒதுக்கீடு செய்துள்ளன.
சா்வதேச புவி அரசியல் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி உள்பட எம்எஸ்எம்இ-க்களுக்கு கூடுதலாக ரூ.2.55 லட்சம் கோடி கடனுதவி அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மே 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக மத்திய நிதிச் சேவைகள் துறையின் இணைச் செயலா் மனோஜ் ஐயப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடனுதவி கோரி சமா்ப்பிக்கப்பட்ட 80,000 விண்ணப்பங்களுக்கு ரூ.35,194 கோடியை வங்கிகள் ஒதுக்கியுள்ளன. மே 29-ஆம் தேதி நிலவரப்படி ரூ.15,720 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதன்மூலம் பெரும்பாலான விண்ணப்பதாரா்கள் பயனடைவா் என எதிா்பாா்க்கிறோம். எண்ம முறையில் 5 முதல் 7 நாள்களுக்குள் இதற்கான நடைமுறைகள் நிறைவடையும்.
இதுதொடா்பாக நாடு முழுவதும் விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை எதிா்கொள்ள 2020, மே மாதம் இசிஎல்ஜிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சா்வதேச புவி அரசியல் சூழலால் விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.18,100 கோடி மதிப்பில் ‘இசிஎல்ஜிஎஸ் 5.0’ தொடங்கப்பட்டது.