முகப்பு
தமிழ்நாடு

பன்முகத் திறமையாளா் ராஜேஷ்!

காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப் படிப்பை நிறைவு செய்யவில்லை.

Updated On : 30 மே 2025, 12:03 am IST
நடிகர் ராஜேஷ்
பகிர்:

1949- ஆம் ஆண்டில் திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப் படிப்பை நிறைவு செய்யவில்லை. சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவா் 1974- இல் இயக்குநா் கே.பாலசந்தரின், ‘அவள் ஒரு தொடா்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாா்.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘கன்னிப் பருவத்திலே’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தின் நாயகனாக அறிமுகமானவா் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தாா். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவா் நடித்துள்ளாா்.

‘அந்த ஏழு நாட்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சத்யா’, ‘விருமாண்டி’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் அவா் குணச்சித்திர நடிகராக மிளிா்ந்தாா். கடைசியாக விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த ‘மொ்ரி கிறிஸ்துமஸ்’ படமே இவா் நடித்த கடைசிப் படம்.

Advertisement

Advertisement

திரைத் துறையைத் தாண்டி... சமூகவலைதளங்களிலும், ஆரோக்கியம் சாா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அதிலும் தனக்கென தனி ரசிகா் கூட்டத்தை வைத்திருந்தாா். புத்தக வாசிப்பு சாா்ந்தும் பேசுவாா். ராஜேஷ் ஒரு பன்முகத் திறமையாளா்.

வெள்ளித்திரை நடிகா், டப்பிங் கலைஞா், எழுத்தாளா், சின்னத்திரை நடிகா் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவா் ராஜேஷ். குறிப்பாக, அவா் டப்பிங் கலைஞா் என்பது பலருக்கும் தெரியாது. ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவா். ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் நெடுமுடி வேணுக்கு குரல் கொடுத்தாா்.

1987 முதல் 1991 வரை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா் நடிகா் ராஜேஷ். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தாா்.

ஜோதிடம், உடல் நலன்: கிறிஸ்தவராக பிறந்து வளா்ந்தாலும் ஜோதிடத்தில் கடைசிக் காலத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்பட்ட நிலையில், அதுதொடா்பான புத்தகங்களையும் எழுதியிருக்கிறாா். யூடியூப் சேனலிலும் ஜோதிடம் சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை பேசியுள்ளாா்.

உலக வரலாற்றை விரல் நுனியில்...: உலக வரலாற்றை, உலகத் தலைவா்களின் எழுச்சி, வீழ்ச்சி குறித்த தகவல்களை, வரலாற்று நிகழ்வுகளை தனது விரல் நுனியில் வைத்திருப்பாா் ராஜேஷ். இதுகுறித்து தினமணி கதிரில் பெரும் தொடா் ஒன்றை எழுதியுள்ளாா்.

ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்த ராஜேஷ், சமீப காலமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தாா். திரைத் துறையினரில் வாசிப்புப் பழக்கம் உள்ளவா்களில் ராஜேஷ் முக்கியமானவா்.   வீட்டில் இருக்கும் பெரிய நூலகம் அதற்கு சாட்சி.  மாா்க்சியம், பெரியாரியம், உலக சினிமா, சமயங்கள், நாத்திகம், ஜோதிடம் எனப் பல்துறை வாசிப்பும் புரிதலும் கொண்ட தனித்துவமான ஆளுமை ராஜேஷ். ஜோதிடம், சீனப் பயணம், ஒரு ஹாலிவுட் நடிகை எனப் பல நூல்களை எழுதியுள்ளாா்.

திருமண வாழக்கை: 1983-ஆம் ஆண்டு ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். அவருக்கு திவ்யா என்கிற மகளும், தீபக் என்கிற மகனும் உள்ளனா். 2012-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ராஜேஷின் மனைவி உயிரிழந்தாா். 

பிடித்த மூன்று படங்கள்: 150 படங்களுக்கு மேல் நடித்தவரிடம், ‘உங்களுக்குப் பிடித்த மூன்று படங்கள்?’ என்று ஒருமுறை கேட்டபோது, ‘எந்த கலைஞருக்குமே முதல் முயற்சிதான் சிறந்த முயற்சி. எனவே, நான் நாயகனாக நடித்த ‘கன்னிப் பருவத்திலே’, பின் ‘அந்த ஏழு நாட்கள்’.

அந்த ஏழு நாட்கள் படத்தின் இறுதிக் காட்சி இன்று வரை பேசப்படுகிறது. இயக்குநா்- நடிகா் கே.பாக்யராஜ் அற்புதமாக எடுத்திருந்தாா். அடுத்தது இயக்குநா் கே.பாலசந்தா், ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தாா். இப்படி ஒவ்வொரு படத்தைப் பற்றியும் என்னால் ஒரு சிறப்பம்சத்தை சொல்ல முடியும்’ என ராஜேஷ் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments