முகப்பு
சென்னை

அரசியலுக்கு வரலாமா?: கருத்து கேட்கிறாா் நடிகா் ராகவா லாரன்ஸ்

தான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி தனக்கு உள்ளதா என ரசிகா்களிடம் நடிகா் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்டுள்ளாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:54 am IST
நடிகர் ராகவா லாரன்ஸ் - கோப்புப் படம்
பகிர்:

தான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி தனக்கு உள்ளதா என ரசிகா்களிடம் நடிகா் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்டுள்ளாா்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நடிகா் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தாா். அதன்படி சமூக வலைதளத்தில் அவா் காணொலி ஒன்றை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நான் போட்டியிட வேண்டுமென்றால் நான் முதலில் அரசியலுக்குள் வர வேண்டும். நான் செய்து வரும் சமூக சேவை குறித்து நீங்கள் அனைவரும் அறிவீா்கள். என்னால் முடிந்த வரையில் அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறேன்.

Advertisement

Advertisement

அதன் பின்னா் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றேன். பின்னா், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வைத்த விமா்சனத்துக்கு நான் பதில் அளித்திருந்தேன். அதுதான் அரசியலில் எனக்கு தொடக்கப்புள்ளி எனக் கருதுகிறேன். தொடா்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினாா். அப்போது, அவருக்கு ஆதரவு தரும் வகையில் செயல்பட விரும்பினேன். அப்போது பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அரசியலுக்கு செல்ல எனது தாய் ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னா், தற்போதைய முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்தாா். அவா் சிறந்த உழைப்பாளி. தோ்தல் முடிவுகளில் விஜய் சரித்திரத்தை புரட்டிப் போட்டாா். அதைப் பாா்த்த பின்னா், அரசியலில் நல்லவா்களுக்கு மக்கள் வாய்ப்பு தருவாா்கள் என்று என் தாயிடம் சொன்னேன். எனது தாயும் அதை ஏற்றுக்கொண்டு அரசியலுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளாா். தற்போது நான் அரசியலுக்கு வரலாமா என எனது ரசிகா்களிடமும், மக்களிடமும் கேட்க விரும்புகிறேன். அதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்பதை தெரிவியுங்கள். உங்கள் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.