மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்
மக்களையும் ரசிகர்களையும் நாய்களுடன் ஒப்பிடவில்லை என ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளது குறித்து...
மக்களையும் ரசிகர்களையும் நாய்களுடன் ஒப்பிடவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று (ஜூன் 14) விளக்கம் அளித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் சமீப காலமாக அறிவித்து வருகிறார். இது தொடர்பான சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில் தவெக அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது: ''புது இடத்தில், ஒரு வாடகை வீட்டுக்குச் சென்றாலே அங்கு பழக ஒரு மாதம் ஆகும். அந்த வீட்டில் எது பிரச்சினை, அந்தத் தெருவில் உள்ள நாய்களை எப்படி நமக்குப் பழக்கப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளவே காலநேரம் தேவை.
Advertisement
Advertisement
ஒரு நாய்க்கோ, ஒரு வாடகை வீட்டுக்கோ நேரம் தேவை என்றால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் கால அவகாசம் கொடுப்பது நல்லது. இந்த ஆட்சி மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க பொறாமையே காரணம். விமர்சனங்களை வைப்பதற்கு முன்பு நாம் என்ன செய்தோம் என்று சிந்தித்துவிட்டு விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்'' என ராகவா லாரன்ஸ் பேசியிருந்தார்.
இதனிடையே, மின்சாரம் இல்லை என வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதற்கு ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக பரவிவரும் தவறான புரிதலைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனது ரசிகர்களும் மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். மக்களை நான் நாய்கள் என்று குறிப்பிட்டதாகச் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது.
நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும்போது, அந்தச் சூழலையும், அங்குள்ள நாய்களையும், அவற்றின் பழக்கவழக்கங்கள் மற்றும் விருப்பமான உணவுகளை புரிந்துகொள்ளச் சிறிது காலம் தேவைப்படும் என்பதுதான். என் தாய்க்கு இணையாக மதிக்கும் மனிதர்களை நாய்கள் என்று அழைக்கும் அளவுக்குக் கல்நெஞ்சம் படைத்தனல்ல.
ஒரு புதிய சூழலுக்குப் பழகி அதைப் புரிந்துகொள்வதற்கு நேரம் எடுக்கும் என்பது பற்றித்தான் நான் பேசினேனே தவிர, யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. எனவே, அனைவரும் முழு விடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.