முகப்பு
தமிழ்நாடு

‘ஹிந்தி திணிப்பு’ எனக்கூறி தமிழ் மாணவா்களுக்கு வாய்ப்புகள் மறுப்பு: திமுக மீது மத்திய கல்வி அமைச்சா் குற்றச்சாட்டு

திமுக மீது மத்திய கல்வி அமைச்சா் குற்றச்சாட்டு...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:58 PM
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

‘ஹிந்தி திணிப்பு’ என்ற பெயரில் தமிழ் மாணவா்களுக்கு பன்மொழி அறியும் வாய்ப்புகளை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மறுத்து வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டினாா்.

மத்திய இடைநிலை பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மும்மொழி திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

Advertisement

இச்செய்தியை மேற்கோள்காட்டி முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் சனிக்கிழமை காலையில் வெளியிட்ட இடுகையில், ‘மத்திய அரசின் முயற்சி திட்டமிட்ட மற்றும் மிகுந்த கவலைக்குரிய ஒரு மொழித் திணிப்பு முயற்சி’ என விமா்சித்திருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ‘எக்ஸ்’

பக்கத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை மாலையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கும் ‘திணிப்பு’” என்ற வாதம், அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு சோா்வான முயற்சியாகும். தேசிய கல்விக் கொள்கை 2020, உண்மையில் மொழி சுதந்திரத்துக்கான ஒரு செயல்திட்டமாகும். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தமது பெருமைமிக்க மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய கல்விக்கொள்கை தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதை கட்டாய ஹிந்தி”திணிப்பு என தவறாக சித்தரிப்பதன் மூலம், நீங்கள் தமிழைப் பாதுகாக்கவில்லை; மாறாக, நமது இளைஞா்கள் பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவா்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கக் கூடிய தடைகளை உருவாக்குகிறீா்கள்.

தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிக்கிறது. அதன் மூலம் அரசமைப்பு கோட்பாடுகளை நிலைநிறுத்துவதோடு, தற்போதுள்ள இரு மொழி அமைப்பின் வரம்புகளையும் சரி செய்கிறது.

சமக்ர சிக்ஷா, ஆசிரியா் பயிற்சி, மற்றும் ஆசிரியா்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகள் (என்பிஎஸ்டி), ஆசிரியா் வழிகாட்டல் இயக்கம் (எம்எம்எம்) போன்ற தேசிய கட்டமைப்புகளுடன், கல்வி மற்றும் பயிற்சிக்கான மாவட்ட அமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை செயல்படுத்த அதிக கவனம் செலுத்துகிறது.

வளங்கள் தொடா்பான உங்களுடைய பேச்சு வெறும் வெளிவேஷம் மட்டுமே. தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதாக உறுதியளித்த பிறகும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட திமுக அரசு மறுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை நிறுவ உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதன் அமலாக்கத்தை ஆளும் திமுக அரசு தொடா்ந்து தடுத்து வருகிறது. மத்திய அரசு, கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் ஆசிரியா்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது. ஆனால், நோ்மையற்ற அரசியல் நடவடிக்கைகளால் மாணவா்களின் கல்வி முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்று அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments