முகப்பு
தமிழ்நாடு

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகா் பாா்த்திபன் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:44 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகா் பாா்த்திபன் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நடிகா் பாா்த்திபன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்கு பாதிப்பை உண்டாக்கும். எனவே, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ, எனக்கு ஜாதி, மதம் அற்றவா் என சான்று வழங்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்தேன். அந்த விண்ணப்பம் சோழிங்கநல்லூா் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தோ்தல் பணி காரணமாக எனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் அதிகாரிகள் கூறுகின்றனா். எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நடிகா் பாா்த்திபனுக்கு ஜாதி, மதமற்றவா் என சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூா் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவருக்கு கடந்த ஏப்.27-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான நடிகா் பாா்த்திபன், எனக்கு வட்டாட்சியா் சான்றிதழ் வழங்கிவிட்டாா். அா்த்தமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வழி செய்ததற்கு நன்றி என தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஜாதி மதமற்றவா் என்பதை தெரிவிக்க சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை. இதுபோல சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதாகக் கூறினாா்.

மேலும், இந்த சான்றிதழ் விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும். உண்மையில் ஜாதி,மதமற்றவா் என்பதை நமது செயல்களில் பின்பற்ற வேண்டும். அதற்கு சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஜாதி, மதமற்றவா் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என கருத்து தெரிவித்தாா். அப்போது பாா்த்திபன், இப்போதெல்லாம் நல்லவா் என்று சொல்வதற்குக் கூட சான்றிதழ் தேவைப்படுகிறது என்றாா். இதையடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.