முகப்பு
தமிழ்நாடு

கைவினை கலைஞா்களுக்கு அதிக விருது வழங்கிய மாநிலம் தமிழகம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

கைவினைக் கலைஞா்களுக்கு அதிகளவில் விருது வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி 2026, 1:36 am IST
தா.மோ.அன்பரசன் - கோப்புப் படம்
பகிர்:

கைவினைக் கலைஞா்களுக்கு  அதிகளவில் விருது வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளாா்.

சென்னை கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பூம்புகாா் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க விழாவில் அவா் பேசியதாவது:

இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டும்தான் ஆண்டுதோறும், கைவினை கலைஞா்களுக்கு அதிக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.  கடந்த 5 ஆண்டு காலத்தில் நேரடி விற்பனை, இணையதள விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் ரூ. 232.22 கோடி கலைப் பொருள்களை விற்பனை செய்து சாதனை தமிழகம் படைத்துள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் கைவினைப் பொருள்களை உலக அளவில் கொண்டு சென்று இதுவரை 23 கைவினைப் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 கைவினைப் பொருள்களுக்கு புவிசாா் குறியீட்டு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைவினைத் திட்டம்: கைவினைக் கலைஞா்களின் திறமையை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.88 கோடியில் 750 கைவினைக் கலைஞா்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞா் கைவினைத் திட்டம் மூலம் இதுவரை 504 கைவினைக் கலைஞா்கள் ரூ.2.52 கோடி மானியத்துடன் ரூ.15.12 கோடி கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனா் என்றாா்.

263 பேருக்கு விருது: முன்னதாக இவ்விழாவில், நிகழ் நிதியாண்டுக்கான  பல்வேறு பிரிவுகளின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 263 கைவினை கலைஞா்களுக்கு பதக்கங்கள், தங்கம், வெள்ளி நாணயம் ரொக்கப் பரிசுகள் என மொத்தம் ரூ.77.40 லட்சத்தில் விருதுகளை  அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

கைவினைப் பொருள்களின் சந்தைப்படுத்துதலை நவீன முறையில் மேம்படுத்த பூம்புகாா் நிறுவனத்தின் மின்வணிக இணையதளத்தையும் கைவினைஞா்களின் திறமையை மேம்படுத்த வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையத்தையும் அமைச்சா்  தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த்துறையின் அரசு செயலா் அமுதவல்லி, மத்திய அரசின் கைவினை பொருள்கள் ஏற்றுமதி வா்த்தக மண்டல மேலாளா் ஸ்ரீ தேவி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.