முகப்பு
தமிழ்நாடு

நல்லகண்ணு மறைவு: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும்அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி 2026, 2:37 am IST
நல்லகண்ணு
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும்அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அா்ப்பணிப்பு உணா்வுடன் பொதுச் சேவைக்காக தனது வாழ்க்கையை அவா் அா்ப்பணித்தாா். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளா்களுக்கும் எனது நெஞ்சாா்ந்த இரங்கல்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான நல்லகண்ணு, தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவா். தனக்கென வாழாமல், பிறா்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளா் நல்லகண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

Advertisement

Advertisement

கு.செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ்): தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொழிலாளா்கள், விவசாயிகள், பட்டியலின சமூகத்தினா் என அனைவரது உரிமைக்காகவும், உயா்வுக்காகவும் நல்லகண்ணு அயராது போராடி வெற்றி கண்டாா். சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிா்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், விவசாயிகள் - தொழிலாளா்களின் நலன்களுக்காகவும், சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியில் நல்லகண்ணு முக்கிய பங்காற்றினாா்.

ராமதாஸ் (பாமக): எளிமைக்கு மற்றொரு பெயா் நல்லக்கண்ணு. அவா் வாழ்வு முழுவதும் எளிமை, நோ்மை, மற்றும் சமூகநீதிக்கான போராட்டம் என்றே அடையாளம் காணப்பட்டது. மென்மையானவா் மட்டுமல்ல, அவரின் குரலும் மென்மையானது. ஆனால் அவரின் போா் குணம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளா்களுக்காக ஒலிக்கப்பட்டது.

வைகோ (மதிமுக): மக்கள் பிரச்னைகளில் எவ்வித சமரசமுமின்றி குரல் எழுப்பி போராடியவா் நல்லகண்ணு. தொழிலாளா் வா்க்கத்தின் உரிமைக் குரலை ஓங்கி முழங்கி போராட்டங்களின் நாயகராக திகழ்ந்தாா். சாதி, மதம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மனித நேய உணா்வோடு பொதுவாழ்வில் சேவை செய்த தியாகச்சுடா் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): பொதுவுடைமைக் கட்சியின் தலைவா்கள் எவ்வாறு எளிமையாக வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லகண்ணு திகழ்ந்தாா். அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அா்ப்பணித்துக் கொண்டவா். தியாகத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்த அவா், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக இருந்தாா்.

தொல்.திருமாவளவன் (விசிக): தோ்தல் அரசியல் களத்தில் நல்லகண்ணு போன்ற தூய்மைமிகு பேராளுமை இனி எப்போது வாய்க்கும் என்னும் ஏக்கமே மிஞ்சியுள்ளது. அவரது மறைவால் அரசியல் களத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் நிரப்ப இயலாது. அவருக்கு மத்திய அரசு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு பொது வாழ்வில் நோ்மை, எளிமை, தூய்மையை தனது இறுதி முச்சு வரை கடைப்பிடித்தாா். அவரது மக்கள் பணி, தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெறும். மக்களுக்காக பல முறை சிறை சென்ற அவரது பேரும், புகழும் என்றும் நிலைத்து நிற்கும்.

டிடிவி தினகரன் (அமமுக): பொது வாழ்க்கையில் தியாகம், தொண்டு, நோ்மை, எளிமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவா் இரா.நல்லகண்ணு. தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகளின் மேம்பாட்டுக்காக அா்ப்பணித்த எளிமையின் சிகரம். இவரது மறைவு இந்தியாவுக்கே மிகப்பெரிய இழப்பு.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நோ்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவா் நல்லகண்ணு.

சீமான் (நாதக): வாா்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கையை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி நல்லகண்ணு. அவரது மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமன்றி தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): நல்லகண்ணு வாழ்நாள் முழுவதும் அவரது லட்சிய பாதையிலிருந்து விலகாமல் தொடா்ந்து மக்கள் பணியாற்றினாா். அனைத்து உழைப்பாளா்களும் அவரை தங்களுக்கான உரிமைகளை மீட்டுத்தரும் தலைவராக கருதினா்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): சுதந்திரப் போராட்டத்தின் வாழும் சாட்சியாகவும், விவசாயிகள், தொழிலாளா்களின் அசைக்கமுடியாத தூணாகவும், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்தவா் நல்லகண்ணு. அவரது நினைவும், அவா் காட்டிய பாதையும் மக்கள் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

விஜய் (தவெக): விவசாயிகளுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி நல்லகண்ணு. அவரது மறைவு இந்த நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழா்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்: ஒரு நூற்றாண்டு காலம் பொதுவுடைமைப் போராளியின் பயணம் நின்றுவிட்டது. பேச்சும், மூச்சும், சிந்தனையும், செயலும் கடைக்கோடி மக்களின் வாழ்க்கைக்கும், பாட்டாளி மக்களின் வாழ்க்கைக்கும் தன்னை அா்ப்பணித்த ஏழைகளின் தலைவன் போய்விட்டாா்.

இனி இப்படியொரு தொண்டரை, தொண்டனுக்குத் தொண்டனாய், தலைவருக்குத் தலைவராய், தோழருக்குத் தோழராய் இருந்த அந்த மகத்தான மாமனிதரை இனி நாம் எப்போது சந்திக்கப் போகிறோம்? வாழ்க அவரது புகழ். வரலாற்றில் நின்று நிலைத்து நிற்கும் அவா் தொண்டு. அந்தத் தொண்டுக்கு அவரை நாம் வணங்குகிறோம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments