முகப்பு
தற்போதைய செய்திகள்

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு தலைவர்கள் தெரிவித்துள்ள இரங்கல் குறித்து...

Updated On : 10 ஜூன் 2026, 11:43 am IST
பாரதிராஜா - x
பகிர்:

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவையொட்டி, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருகமான மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் புதன்கிழமை இரங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று(ஜூன் 10) அதிகாலை காலமானார்.

Advertisement

Advertisement

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் ச.ஜோசப் விஜய் இரங்கல்

முதல்வரும் தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா.

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர்.

பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’பாரதிராஜாவின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!

தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.

அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜாவை சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.

பாரதிராஜாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!

மத்திய இணையமைச்சர் எல். முருகன்

தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு இயக்குநரும், கிராமிய வாழ்க்கையை உலக அரங்கில் எடுத்துச் சென்ற தலைசிறந்த படைப்பாளருமான பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், மக்களின் வாழ்க்கை முறையையும், உணர்வுகளையும் தனது படைப்புகள் மூலம் திரையுலகில் தனித்துவமாகப் பதிவு செய்து, தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இயக்குநர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா.

அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

"என் இனிய தமிழ் மக்களே" என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த பாரதிராஜாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ச.ராமதாஸ்

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமிய வாழ்க்கையின் உணர்வுகளையும், தமிழர் பண்பாடு, மரபு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை திரைப்பட மொழியின் மூலம் உலக அரங்கில் உயர்த்திக் காட்டிய தலைசிறந்த திரைப்பட இயக்குநர் சிகரம் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கிய பாரதிராஜா அவர்கள், வெறும் திரைப்பட இயக்குநராக மட்டும் அல்லாமல், தமிழ் மண்ணின் பெருமையையும் தமிழர் அடையாளத்தையும் கலை வடிவில் பதிவு செய்த பண்பாட்டு தூதுவராக திகழ்ந்தார். நகரங்களை மையப்படுத்திய திரைப்பட உலகை கிராமங்களின் நிஜ வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்று, உழைக்கும் மக்களின் உணர்வுகள், அவர்களின் போராட்டங்கள், உறவுகள் மற்றும் சமூக உண்மைகளை திரையில் உயிர்ப்பித்தவர்.

அவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படைப்புகளாக இல்லாமல், சமூக அக்கறை, மனிதநேயம், சமத்துவ சிந்தனை மற்றும் உரிமைக் குரலை மக்களிடம் கொண்டு சென்ற விழிப்புணர்வு ஆவணங்களாகவும் அமைந்தன. தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழர் வாழ்வின் நுணுக்கங்களையும் உலக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்கு தனித்துவமான இடம் உண்டு.

என் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்டவராக இருந்த பாரதிராஜா, சமூக பிரச்னைகள் குறித்தும், தமிழ் இனத்தின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார். கலைஞராக மட்டுமின்றி சமூக சிந்தனையாளராகவும், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பொது அறிவாளராகவும் அவர் விளங்கினார்.

பாரதிராஜா மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது படைப்புகளும், சிந்தனைகளும், தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளும் என்றும் நிலைத்திருக்கும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

தமிழ் திரைப்பட உலகில் தனிமுத்திரை பதித்து சிகரமாக உயர்ந்த இயக்குநர் பாரதிராஜா (84) புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை 2.30 மணியளவில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

தேனி மாவட்டம், அல்லி நகரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சின்னசாமி, தமிழ் திரையுலகில் பாரதிராஜாவாக நுழைந்து 1977 ஆம் ஆண்டில் “16 வயதினிலே” என்ற புகழ் பெற்ற திரைப்படத்தை தந்ததன் மூலம் இயக்குநர் வரிசையில் முன்னேறி “சிகரமாக” உயர்ந்தவர்.

திரைப்படங்கள் படப்பிடிப்பு நிலையங்களுக்குள் (ஸ்டுடியோ) உருவாகி வந்த நிலைகளை மாற்றி, கிராமங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் அழைத்துச் சென்று இயற்கையான காட்சி அமைப்புகளில் “மண் வாசனை” வீசச் செய்தவர்.

சமூக வாழ்வில் முன்னேறிச் செல்ல தடைகளாக இருக்கும் சாதிகள் மற்றும் மதங்களின் எல்லைகளை உடைத்து “மனிதாபிமானத்தை உயர்த்தி பிடித்து, சமத்துவ நிலைக்கு மனித சமூகம் உயர வேண்டும்”, என்ற கருத்துகளை திரைப்படங்களில் வலிமையாக முன் வைத்து, தனிச்சிறப்புப் பெற்றவர் இசைஞானி இளையராஜாவும், இயக்குநர் சிகரம் பாரதிராஜாவும், நினைவில் வாழும் எஸ்பி பாலசுப்பிரமணியம் மூவரும் தமிழ் திரையுலகின் திசைவழியில் மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இணையற்ற நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் தனித்துவம் வாய்ந்த இயக்குநர்களாக விளங்கும் பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை போன்ற இயக்குநர்களை வழங்கிய பேராசன் பாரதிராஜா.

இவரது இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில், வேதம்புதிது, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற படைப்புகள் நிகரற்ற இடம் பிடித்து நிற்பவைகளாகும்.

திரைப்படங்களில் மட்டும் அல்லாமல், காவிரி நதிநீர் பகிர்வு, இலங்கை தமிழர் உரிமை பாதுகாப்பு, மாநில உரிமைகள் என வரும் போது களப் போராட்டக் களங்கில் பங்கேற்ற செயல்பாட்டாளர். தொடர்ந்து ஆதரித்தும் வந்தவர்.

வயது மூப்பு மற்றும் மகன் மனோஜ் மறைவு பாரதிராஜாவை பெரிதும் பாதித்து விட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பாரதிராஜாவின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து நிற்கும் அவரது வாழ்விணையர், மகள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி

இயக்குநர் இமயம் என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார். நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வெற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார்; நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்ட பெரும்பன்மையான விருதுகளை வாங்கிக் குவித்தவர் அவர். அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். கடந்த 2&ஆம் தேதி மாலை பாரதிராஜா அவர்களை, இயக்குனர் தங்கர் பச்சானுடன் சென்று அவரது நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். எனது நலம் விசாரித்த அவர், பொதுவான விஷயங்கள் குறித்து என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தென்பட்ட தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவற்றைப் பார்த்த நான் விரைவில் அவர் முழுமையாக நலம் பெறுவார்; இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இன்று காலை கிடைத்த அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார்.

இயக்குநர் பாரதிராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)

இயக்குநர் இமயம் சகோதரர் பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் எனும் செய்தியறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

சகோதரர் பாரதிராஜா ஸ்டுடியோவில் படம் எடுப்பதை மாற்றி பட்டி தொட்டியெல்லாம் சென்று படமெடுத்து திரைத்துறையில் புதிய சகாப்தத்தைப் புரட்சியை நிகழ்த்தியவர். அவர் இயக்கிய திரைப்படங்களின் துவக்கத்தில் “என் இனிய தமிழ் மக்களே” என ஒலிக்கும் அவரது குரல் அனைவரின் மனதையும் ஈர்த்தது. பத்மஸ்ரீ விருது உட்பட மாநில அரசு விருதுகள் பல பெற்றவர். இயக்குநர், திரைப்பட நடிகர், கதாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். புதிய, ஏராளமான இயக்குநர்கள், நடிகர்-நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அனைவரிடத்திலும் அன்பாய் பழகக் கூடியவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். இவரது மறைவு அன்னாரின் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரைத்துறை தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழக அரசு அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தெரிவித்துகொள்கிறது.

தமிழ் மண் சார்ந்த‌ பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய உலகளாவிய பார்வையால் தமிழ்த் திரைப்படத்துறையை மாற்றியமைத்த பாரதிராஜாவின் மறைவு, தமிழர்களுக்குப் பேரிழப்பாகும். தமிழ்த் திரையுலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான அவரது மறைவுக்கு 'தமிழக முற்போக்கு மக்கள் கட்சி' தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக்கொள்கிறது எனதெரிவித்துள்ளார்.

summary

Passing of legendary film director Bharathiraja: Leaders offer condolences Message

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.