முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 15 ஜனவரி, 2026 at 12:34 PM
முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதனால், நேரிட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின், டிச. 1 ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறையினர் நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை, டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 84,848 விவசாயிகள் பயன் பெறும் வகையில் நிவாரணத்தொகையாக ரூ. 111.96 கோடி ஒப்பளிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசாணையில், “2025-2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட முதல்வர் ஸ்டாலின், நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டருக்கு ரூ. 20,000 வழங்க உத்தரவிட்டார்.

இவ்வுத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது.

நிவரணத் தொகையான ரூ.111.96 கோடி, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை டிசம்பர் மாதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

summary

Rs. 111 crore that has been directly credited to the bank accounts of farmers as relief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.