8,200 பேருக்கு வேலை! ரூ. 18,600 கோடி முதலீட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்!!
முதல்வர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதைப் பற்றி...
ரூ. 18,000 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மூன்று திட்டங்களுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (ஜூன் 4) தலைமைச் செயலகத்தில், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, ரூ. 18,600 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த முதலீடு தொடர்பாக முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எஸ். என். சுப்ரமணியன் சந்தித்து கலந்துரையாடினார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ச. விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு. அலர்மேல்மங்கை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளில் ரூ. 18,600 கோடி முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் முதல்வர் விஜய் பாராட்டினார்.
தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு முதல்வர் விஜய் முன்னிலையில்,
1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 15,000 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்.
2. கோயம்புத்தூரில் ரூ. 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2.000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருள்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ. 1,100 கோடி முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம்” என தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற முதல்வர் விஜய்யின் லட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக அமைந்துள்ள பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம், மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும்.
மேலும் காட்டுப்பள்ளி திட்டம் கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுவரும்.
இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.