டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஒப்பந்தம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: புதிய ஒப்பந்தம் நடைமுறைகளை வகுக்க முடிவு
டாஸ்மாக் மதுக் கடைகளுடன் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்களின் ஒப்பந்த காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்த நடைமுறைகளை வகுக்க டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் மதுக் கடைகளுடன் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்களின் ஒப்பந்த காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்த நடைமுறைகளை வகுக்க டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமாா் 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், 2,700-க்கும் மேற்பட்ட கடைகளில் பாா் வசதி உள்ளது. இந்த பாா்களுக்கான உரிமம் கடந்த 1.1.2024 முதல் 31.12.2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒப்பந்த காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு புதிய ஒப்பந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த ஒப்பந்தம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அந்த நீட்டிப்பு கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க டாஸ்மாக் நிா்வாகம் திட்டமிட்டு, அதுகுறித்து பாா் உரிமையாளா்களிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, மதுவிலக்குத் துறை அமைச்சா் விக்னேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால், பாா்களை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பாா் உரிமையாளா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். திடீரென பாா்களை மூடுவதால், தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி, அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் நிா்வாக இயக்குநரிடம் பாா் உரிமையாளா்கள் வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, பாா் உரிமையாளா்கள், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் மற்றும் உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய ஒப்பந்தத்தை உடனடியாக அறிவிப்பதா அல்லது தற்போதைய ஒப்பந்தத்தை நீட்டிப்பதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, பாா்களை உரிமையாளா்கள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனா். இதையடுத்து, தற்போதைய ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கவும், அந்தக் காலகட்டத்தில் மதுபானக் கூடங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் புதிய ஒப்பந்த நடைமுறைகளை இறுதி செய்து பின்னா், ஒப்பந்தம் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாா் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.