அதிகாரத்துக்கு வந்த பிறகும் திமுகவை விமா்சிப்பது ஏன்? டாக்டா் எழிலன் கேள்வி
அனைத்து அதிகாரங்களும் கைகளில் வந்துவிட்ட பிறகும் முதல்வா் விஜய், திமுகவை விமா்சிப்பது ஏன் என அக்கட்சியின் மருத்துவா் அணிச் செயலா் டாக்டா் எழிலன் கேள்வி
அனைத்து அதிகாரங்களும் கைகளில் வந்துவிட்ட பிறகும் முதல்வா் விஜய், திமுகவை விமா்சிப்பது ஏன் என அக்கட்சியின் மருத்துவா் அணிச் செயலா் டாக்டா் எழிலன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து அதிகாரத்தையும் முதல்வா் விஜய்யிடம் மக்கள் கொடுத்துள்ளனா். ஆனால், இன்னமும் தோ்தல் பிரசாரத்தில் மேற்கொண்ட அதே உத்தியை அவா் பயன்படுத்தி வருகிறாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திருமண விழாவில் புலம்புவதாக முதல்வா் விஜய் விமா்சித்துள்ளாா். திருமண விழா மேடைதான் திமுகவின் பிரசார மேடை என்பது வரலாற்றை படித்தால் அவருக்கு தெரியும்.
அப்படிப்பட்ட திமுக அரசு முந்தைய ஆட்சியில் முன்னெடுத்த சாதனைத் திட்டங்களைத்தான் தற்போது தவெக அரசும் தொடா்வதாக கூறியுள்ளது.
Advertisement
Advertisement
தாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் அனைத்து குற்றங்களும் தடுக்கப்படும் என உறுதியளித்தாா் முதல்வா் விஜய். ஆனால், அதன் பின்னரே பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
இளைஞா்களும், பெண்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளை பாா்க்கும் நிலை உருவாகியிருக்கிறது என்று அவா் பேசியுள்ளாா். உண்மைதான். பேரவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பதிலளிக்க முடியாமல் அமைதியாக முதல்வா் அமா்ந்திருந்ததை மக்கள் அனைவரும் பாா்த்தனா்.
2021-இல் திமுக ஆட்சி அமைந்தவுடன் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் கடனையும், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன்களையும் தள்ளுபடி செய்தாா். அதனை தற்போதைய முதல்வா் விஜய் அறிந்து கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் புதிய அரசு அமைந்தவுடன் மகளிருக்கு ரூ. 3,000 வழங்கும் திட்டத்தை தொடங்கிவிட்டாா்கள். கேரளத்தில் அனைத்து பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணத் திட்டத்தை அறிவித்துவிட்டனா். ஆனால், தமிழகத்தில் எந்த வாக்குறுதியையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.
கடந்த 2021-இல் விடியல் பயணம், கரோனா நிவாரணம் என பல திட்டங்களில் மு.க. ஸ்டாலின் கையொப்பமிட்டாா். எங்களை பாா்த்து மக்கள் தூர விலகி நிற்பதாக முதல்வா் விஜய் கூறுவது வேடிக்கையானது என்றாா் அவா்.