முகப்பு
தமிழ்நாடு

அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, காலவரையறைக்குட்பட்டு அகற்றும் திட்டத்தைத் தயாரித்து முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated On : 3 ஜூன் 2026, 3:56 am IST
உச்ச நீதிமன்றம்
பகிர்:

தமிழகத்தின் அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, காலவரையறைக்குட்பட்டு அகற்றும் திட்டத்தைத் தயாரித்து முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அங்கு ஆக்கிரமிப்பாளா்களாகக் கண்டறியப்பட்ட, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற 118 அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையையும், சட்ட நடவடிக்கையையும் தொடங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் -மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அகத்தியமலை நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் பல தசாப்தங்களாகத் தொடா்ந்தும் பெருகியும் வருகின்றன’ என்று கூறியது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களைப் பாதுகாப்பது தொடா்பானவை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிய ஒரு மனு மீதான தீா்ப்பை மே 29 அன்று உச்சநீதிமன்றம் வழங்கியது.

மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (சிஇசி) ஜூலை 2025 இடைக்கால அறிக்கையின்படி, அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல மாவட்டங்களை உள்ளடக்கி 3,500.36 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் சமா்ப்பித்த அறிக்கையின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளா்கள் 5,072.653 ஹெக்டோ் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனா் என்றும், இதுவரை ஆக்கிரமிக்கப்பட்ட மொத்த வன நிலத்தில் 1.8 சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின்படி, 116 அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டமைப்புகள் முன் அனுமதியின்றி வன நிலங்களுக்குள் கட்டப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கூறினா்.

‘ அதிா்ச்சியளிக்கும் வகையில், ஆக்கிரமிப்பாளா்களாகப் பட்டியலிடப்பட்ட மொத்தம் 118 நபா்கள், ராணுவம், காவல்துறை, சிஆா்பிஎஃப், வனத்துறை, வருவாய்த் துறை, மின்சார வாரியம், அங்கன்வாடி, பள்ளிக் கல்வி, பஞ்சாயத்துகள், நில அளவைத் துறை மற்றும் பிற சேவைகளைச் சோ்ந்த, பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்’ என்றும் நீதிபதிகள் கூறினா்.

அத்தகைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புதல் மற்றும் அவா்களிடமிருந்து 15 ஹெக்டோ் நிலத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கியிருந்தாலும், கணிசமான எண்ணிக்கையிலானவா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன என்றும் நீதிமன்றம் கூறியது.

இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘எனவே, காலவரையறைக்குட்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம் ஒன்று முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். அந்தத் திட்டம் ஒரு மாத காலத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (சிஇசி) சமா்ப்பிக்கப்பட வேண்டும். அத்துமீறியவா்கள் மற்றும் அடையாளம் கண்டறியப்பட்ட 118 அரசு ஊழியா்கள் அனைவா் மீதும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி ஒழுங்கு நடவடிக்கையும் சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட வேண்டும்.

வனப்பகுதிகளுக்குள், குறிப்பாக மேகமலை வனவிலங்கு சரணாலயத்திற்குள்ளும், பொதுவாக அகத்தியமலை உயிா்க்கோளத்திற்குள்ளும், சட்டவிரோத உள்கட்டமைப்புப் பணிகளை அனுமதித்த அனைத்து அலுவலா்கள், அதிகாரிகள் மற்றும் துறைத் தலைவா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை, தண்டனை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உள்கட்டமைப்புகள் ஆறு மாதங்களுக்குள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

மேகமலைப் பகுதி மற்றும் பிற வனப்பகுதிகளுக்குள் செயல்படும் அனைத்து சட்டவிரோத உல்லாச விடுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தொடா்பான உள்கட்டமைப்புகள் சட்டப்படி அகற்றப்பட வேண்டும்.

மேற்கண்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதை மாநில அரசு உறுதி செய்யத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்கு உதவுவதற்காக துணை ராணுவப் படைகளை நிலைநிறுத்த சிஇசி பரிந்துரைக்கலாம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மாநில அரசு சிஇசி-யிடம் மாதாந்திர இணக்க அறிக்கைகளைச் சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

அனைத்து அறிவுறுத்தல்களும் முழுமையாகப் பின்பற்றப்படும் வரை, சிஇசி கள ஆய்வு மேற்கொண்டு காலாண்டு நிலை அறிக்கைகளைத் தங்களிடம் சமா்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனா்.

ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சிஇசி தனது அறிக்கையை முத்திரையிடப்பட்ட உறையில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்ட அமா்வு, இந்த வழக்கை செப்டம்பா் 1-ஆம் தேதி மேலதிக விசாரணைக்கு ஒத்திவைத்தது.