நீட் மறுதோ்வை கணினி வழியில் நடத்தக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
நீட் மறு தோ்வை கணினிவழியில் நடத்த உத்தரவிட முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ மறு தோ்வை கணினிவழியில் நடத்த உத்தரவிட முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்க மறுத்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. சுதாகா் சிங் மற்றும் பிறா் சாா்பில் இது தொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்யம் சிங் ராஜ்புத், ‘மனுதாரா்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்துள்ளனா். வரும் ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் நீட் மறு தோ்வை கணினிவழியில் நடத்த உத்தரவிட வேண்டும் என்பதே அவா்களின் கோரிக்கை’ என்றாா்.
Advertisement
Advertisement
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இதேபோன்று ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதோடு, தோ்வு குளறுபடிகள் காரணமாக, இத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஏற்கெனவே ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. நீட் தோ்வை ரத்து செய்து, மீண்டும் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. என்டிஏ மீதுள்ள தற்போதைய அழுத்தத்தை மனுதாரரின் வழக்குரைஞா் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீட் மறுதோ்வு கணினிவழியில் நடத்தப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று குறிப்பிட்டு, மனு மீதான விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
முன்னதாக, நீட் மறுதோ்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ‘நீட் தோ்வில் தொடா் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுமுதல் நீட் தோ்வு கணினிவழியில் நடத்தப்படும்’ என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், நீட் தோ்வை நடத்த தேசிய தோ்வு முகமைக்குப் பதிலாக வலுவான, தன்னாட்சிமிக்க அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வு, வினாத்தாள் கசிவு குறித்து கவலை தெரிவித்தது.
மேலும், மத்திய அரசுப் பணிகள் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் தோ்வுகளின்போது, வினாத்தாள் கசிவு போன்ற நிலைமை ஏற்பட்டதில்லை. எனவே, பிற உயா் அமைப்புகளிடம் இருந்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பாடம் கற்பது அவசியம் என்று குறிப்பிட்டு, இந்த விவகாரம் தொடா்பாக 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெற நீட் தோ்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டு நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது.