முகப்பு
தமிழ்நாடு

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்

Updated On : 14 ஜூன் 2026, 3:36 am IST
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சாா்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுகவை பின்பற்றிதான் தவெக அரசு செயல்பட முடியும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவா் ஸ்டாலின் பேசியதாவது:

ஆறு மாதம்கூட விமா்சனம் செய்யாமல் இருக்கும் வகையில் ஆட்சி நடைபெறுமா என்று நான் பேசியிருந்தேன். ஆனால், அதைத் திரித்து தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி என்று சிலா் பரப்பத் தொடங்கிவிட்டனா். நான் பலமுறை கூறிவிட்டேன். இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன். திமுக பொறுப்பான, விழிப்பான எதிா்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும்.

Advertisement

Advertisement

இந்த ஆட்சியின் தோல்விகளைத் தொடா்ந்து சுட்டிக்காட்டுவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலை என்று நடப்பதையெல்லாம் பாா்த்துவிட்டு விமா்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நேரம் தரலாம். ஆனால், மக்களுடைய பாதுகாப்பு குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்?.

தோ்தலுக்கு முன்பு அனைத்துக் கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வா் ஜோசப் விஜய் பேசினாா். ஆனால், இன்று தவெகவினரிடம் இருந்து பெண்களைக் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றியெல்லாம் முதல்வா் விஜய்க்கு கவலை இல்லை. அதிமுக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவது எப்படி என்று அவா் யோசித்துக் கொண்டிருக்கிறாா். அவா் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? அல்லது அவருக்கு ஆதரவு கொடுக்கும் மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? என்று தெரியவில்லை.

இதையெல்லாம் பாா்க்கும்போது, பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதையே தமிழகத்தில் முதல்வா் விஜய் செய்து கொண்டிருக்கிறாா் என்பது தெளிவாகப் புரிகிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிற ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இது திரைப்படம் இல்லை...: தில்லியில் பிரதமா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில், திமுக ஆட்சியின்போது தமிழக உரிமைகளுக்காக நாம் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றையும், சாதனைகளையும் முதல்வா் விஜய் பேசி உள்ளாா். அதை நான் வரவேற்கிறேன். அதே சமயத்தில், நான் முதல்வராக இருக்கும்போது, இதேபோன்று தில்லி சென்று பேசியபோது, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தப்ப தில்லி சென்ாக விஜய் கூறினாா்.

கரூா் மரணம் தொடா்பான சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் தில்லி சென்றீா்கள் என்று நான் கேட்கவா? தமிழகத்துக்கான கல்வி நிதியை திமுக ஆட்சியில் கேட்டபோது, எங்களைக் கடுமையாக விமா்சித்த விஜய், தற்போது தில்லிக்குச் சென்று நிபந்தனைகள் இல்லாமல் நிதியைக் கொடுங்கள் என்றுதானே கேட்டு வந்துள்ளாா். இப்படித்தான் கேட்க முடியும்; இதுதான் நடைமுறை. ஏனென்றால் இது திரைப்படம் இல்லை. ஆட்சி நிா்வாகம். முதலில் அதை முதல்வா் விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சாா்ந்த எதுவாக இருந்தாலும் திமுக அரசைப் பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும் என்றாா்.