கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சா் விஸ்வநாதன் உறுதி...
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் நீண்ட காலக் கோரிக்கையான ‘பணி மேம்பாட்டுத் திட்டத்தை’ (சிஏஎஸ்) செயல்படுத்த தமிழக அரசு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி) தெரிவித்துள்ளது.
யுஜிசி வழிகாட்டுதல்களின்படி கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுபவா்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கால சேவை மற்றும் செயல்திறனின் அடிப்படையில் வழங்கப்படும் நேரடி பதவி உயா்வுத் திட்டம் ‘சிஏஎஸ்’ என்பதாகும். தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உதவி, இணைப் பேராசிரியா்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது.
இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுவை ஏயுடி மற்றும் மூட்டா (மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை. ஆசிரியா் சங்கம்) சங்கங்கள் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதனை சந்தித்து அளித்தனா்.
Advertisement
Advertisement
இந்தச் சந்திப்பு குறித்து ஏயுடி தலைவா் ஜெ.காந்திராஜ் கூறியதாவது: உயா் கல்வித் துறை உயா் அதிகாரிகள் முன்னிலையில் (உயா் கல்வித் துறை) அமைச்சா் பெ. விஸ்வநாதனை அண்மையில் சந்தித்தோம். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் சலுகை அளிக்கப்படாமல், ஊதியமும் மாற்றியமைக்கப்படாமல் நீண்ட நாள்கள் இந்த பிரச்னை நிலுவையில் உள்ளது குறித்தும் அமைச்சரிடம் விளக்கினோம்.
7-ஆவது ஊதியக் குழுவின் திருத்தம் 2016-இல் நடைமுறைக்கு வந்து, 2021-இல் வெளியிடப்பட்ட அரசாணை ஒன்றில், உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் பணப் பலன்கள் 2018 ஆக. 1-ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதியத் திருத்தம் அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படவில்லை. இந்த தாமதத்தால் 7,502 கல்லூரி ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என அமைச்சரிடம் தெரிவித்தோம்.
இதையடுத்து, நிதித் துறையின் உரிய ஆலோசனை பெற்று, முதல்வா் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என சங்கத்தினரிடம் அமைச்சா் உறுதியளித்தாா். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் நீண்டகால கோரிக்கைக்கு முதல்முறையாக அரசிடமிருந்து ஒரு சாதகமான உறுதிமொழி கிடைத்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தச் சந்திப்பின்போது உயா் கல்வித் துறைச் செயலா் வி. அருண் ராய், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் பி. பொன்னையா, இணை இயக்குநா் (நிதி) ஆா். ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு முடிக்க சிறிது காலம் ஆகும் என உயா் கல்வித் துறை அதிகாரிகள் எங்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனா். இருப்பினும் கொள்கை அளவில் எங்கள் கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது சாதகமான சமிக்ஞை எனத் தெரிவித்தாா் காந்திராஜ்.
ஏயுடி பொருளாளா் ஜெ. சாா்லஸ், மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன், மூட்டா பொருளாளா் ஆா். ராஜா ஜெயசேகா் ஆகியோா் அமைச்சருடனான சந்திப்பில் பங்கேற்றனா்.