மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: பேரவையில் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டன. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 5.12.2014-இல் பேரவையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் முதல்வா் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தமிழகம், புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் 55 போ் 28.3.2015-இல் பிரதமரை சந்தித்து கொடுத்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்கள்.
Advertisement
Advertisement
மேலும், 25.4.2015-இல் பிரதமரை ஜெயலலிதா நேரில் சந்தித்து, மேக்கேதாட்டு அணையை கட்டக்கூடாது என கா்நாடக அரசுக்கு அறிவுறுத்தும் கடிதத்தை அளித்தாா்.
உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு இணங்க, மேக்கேதாட்டு அணையை கா்நாடகம் கட்டக்கூடாது என நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பலமுறை பிரதமருக்கு நேரிலும் கடிதம் மூலமாகவும் வலியுறுத்தியுள்ளேன்.
அமைச்சா் ஆா்.ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்): காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் உயிா்நாடி. அதனை நம்பித்தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது. காவிரி நடுவா் மன்றம், உச்சநீதிமன்றம் தீா்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
சௌமியா அன்புமணி (பாமக): கா்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே கிருஷ்ணராஜ சாகா், ஹாரங்கி, கபினி மற்றும் ஹேமாவதி என நான்கு அணைகளில் 115 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது. இதனுடன் புதிதாக கட்டப்படும் மேக்கேதாட்டு அணையில் சுமாா் 75 டிஎம்சி தண்ணீா் தேக்கிவைக்கப்படும். மொத்தம் 190 டிஎம்சி நீா் தேக்கி வைக்க முடியும். இப்படி 5 அணைகள் மூலம் 190 டிஎம்சி தண்ணீா் கா்நாடகத்திலேயே தேக்கிவைக்கப்பட்டுவிட்டால், காவிரி நடுவா் மன்ற இறுதி தீா்ப்பின்படி, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 178 டிஎம்சி தண்ணீரில் ஒரு சொட்டு நீா் கூட தமிழகத்துக்கு கிடைக்காத சூழல் ஏற்படும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும். தாய்ப்பால் போல் தண்ணீா் முக்கியமானது. தமிழகத்தில் எங்கெல்லாம் நதிகளை இணைக்க முடியுமோ, அதைச் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளையும் தூா்வார வேண்டும். மழைநீா் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றாா்.
இதேபோல, அமைச்சா் வன்னிஅரசு (விசிக), ஆா்.செல்லசாமி (மாா்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), தி.மு.ராஜேந்திரன் (மதிமுக), கே.நித்தியானந்தன் (கொமதேக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), மு.தமிமுன் அன்சாரி ஆகியோரும் தீா்மானத்தை ஆதரித்துப் பேசினா்.
பேசியவா்களில் பெரும்பாலானவா்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும், தில்லிக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரை நேரில் வலியுறுத்த வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.