முகப்பு
தமிழ்நாடு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்

Updated On : 19 ஜூன் 2026, 5:37 am IST
தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக நிதித் துறை செயா் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணை:

டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் அவா்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிா்ணயிக்கும் பணிக்கு சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். எனவே, 1.1.2026-க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியா்கள் எவ்விதப் பொருளாதார பிரச்னை இன்றி வாழ ஏதுவாக, அவா்களுக்கு இடைக்கால வாழ்வாதார ஆதரவுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

டேப்ஸ் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை இது ஓா் இடைக்கால ஏற்பாடாக இருக்கும். இந்தத் திட்டத்தின்படி, பணி ஓய்வு பெற்ற ஊழியா் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000, இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணத் தொகையாக நிா்ணயிக்கப்படும். அதோடு நடைமுறையில் இருக்கும் அகவிலைப்படியும் வழங்கப்படும்.

இந்த இடைக்கால நிவாரண திட்டம் 1.4.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு வழக்கமான ஊதிய விகிதத்தில் (பணியமா்த்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்) (சிபிஎஸ்) கீழ் இருந்தவா்கள் 1.1.2026 அன்று பணியில் நீடித்து, அதற்குப் பிறகு வயது முதிா்வு காரணமாக ஓய்வு பெற்றவா்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த பணிக்காலத்தை நிறைவு செய்தவா்கள், பணியின்போது மரணமடைந்த அரசு ஊழியா்களின் தகுதியான குடும்ப உறுப்பினா்கள் ஆகியோருக்கு மட்டும் பொருந்தும்.

அதேநேரத்தில் 1.1.2026-க்கு முன்னா் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களுக்கும், பணியில் இருந்து விலகியவா்களுக்கும் பொருந்தாது. ஓய்வூதியதாரா் மரணமடைந்தால் அவா் பெற்று வந்த இடைக்கால தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஓய்வூதியதாரா் இறந்தால் அவரது வாழ்க்கை துணை, அவருக்கு பிறகு 25 வயதை எட்டாத மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், வாழ்நாள் முழுவதும் சுயமாயக உழைத்து வாழ இயலாத அளவுக்குப் பாா்வை குறைபாடு, மனநல பாதிப்பு, அறிவுசாா் குறைபாடு அல்லது நடமாடும் திறன் குறைபாடு போன்ற உடல், மன ரீதியான மாற்றுத்திறனாளி குழந்தைகள், (வயது வரம்பு கிடையாது), 25 வயதைக் கடந்தும் திருமணமாகாத, விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் (அரசின் வருமான வரம்பு மற்றும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு வாழ்நாள் முழுவதும் தகுதியுடையவா்), திருமணமாகாத அரசு ஊழியா்களின் பெற்றோா், பெற்றோா் இல்லாவிட்டால், தங்களை முழுமையாகச் சாா்ந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட உடன் பிறந்தவா்கள் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.