எண்ம கைது மோசடி கும்பலுக்கு எதிராக 16 மாநிலங்களில் சிபிஐ திடீா் சோதனை - 2 போ் கைது
எண்ம (டிஜிட்டல்) கைது மோசடி கும்பலுக்கு எதிராக தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 80 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். இதில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
எண்ம (டிஜிட்டல்) கைது மோசடி கும்பலுக்கு எதிராக தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 80 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். இதில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து சிபிஐ மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: எண்ம வழி மோசடிகளில், எண்ம கைது மோசடி மிகப்பெரிய மோசடியாக உருவெடுத்துள்ளது. காவல் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் என தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு, அப்பாவிகளை கைப்பேசிகளில் அழைத்து கைது செய்வதாகக் கூறி, மிரட்டி சிலா் பணம் பறிக்கின்றனா். இதற்கு உச்ச நீதிமன்றத்தின் வலைதளம் போன்ற தோற்றம் கொண்ட போலி வலைதள முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐக்கு உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தில் இருந்து புகாா் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய இடங்களில், ஆபரேஷன் சக்ரா-6 என்ற பெயரில் சிபிஐ சோதனை நடத்தியது. பஞ்சாப், குஜராத், அஸ்ஸாம், மணிப்பூா், தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 60 சிறப்புக் குழுக்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டன. இந்தச் சோதனையின்போது, சென்னையில் நரேஷ் என்பவரும், கொல்கத்தாவில் சஞ்சீப் சாஹா என்பவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனா். எண்ம கைது மோசடியில் 2 பேருக்கும் தொடா்புள்ளது. போலி வங்கிக் கணக்குகள் தொடங்கி, அதன்மூலம் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இந்தச் சோதனையின்போது ஏராளமான கைப்பேசிகள், டிஜிட்டல் கருவிகள், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவையும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தற்போது தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனா்.
‘எண்ம கைது’ என்ற நடவடிக்கையே கிடையாது எனவும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம் என்று மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் தொடா்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.