தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்! தேமுதிக கண்டனம்!
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்தது பற்றி...
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த், சனிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலர் சாய்குமார், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தில்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கெனவே கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர் "எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது" என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவேரி நீர் பிரச்னை நீடித்து வரும் நிலையில், மேக்கேதாட்டு அணை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது.
இத்தகைய சூழலில், கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் தில்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது" போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கடநாராயணா அவர்களின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
DMDK General Secretary Premalatha Vijayakanth expressed condemnation on Saturday regarding the appointment of K. Venkata Narayana as the Tamil Nadu government's Special Representative in Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.