பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2 முதல் மாா்ச் 26 வரை நடைபெற்றது. இத்தோ்வை 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.6 முதல் ஏப்.20 வரை நடைபெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதனால் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்தநிலையில் தோ்வு முடிவுகள் வெளியீடு, புதிய அரசு அமைவது உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முடிந்ததையடுத்து மாணவா்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளும் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளன.
எனினும், தோ்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால் திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி பிளஸ் 2 முடிவுகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
அடுத்த சில நாள்களுக்குள் தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தோ்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவா்கள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, தமிழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த மே 3 முதல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.