ஏஐ விடியோவாக இருக்கலாம்! முதல்வராவதற்கே விஜய் ஏமாற்று வேலை! டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி...
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் விஜய் முதல்வராவதற்கே ஏமாற்று வேலை செய்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவைக் கோரியது. அதன்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில் விசிகவின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இதனிடையேதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதம் போலியானது என்று டிடிவி தினகரனும் காமராஜும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"ஆளுநரிடம் கடிதத்தின் நகலை கொடுத்திருக்கிறார்கள். அசல் கடிதம் எங்கே என்று கேட்டபோதுதான் ஆளுநரின் செயலரிடம் இருந்து எம்எல்ஏவுக்கு அழைப்பு வந்தது. உடனே காமராஜ், எங்களுடைய வழக்கறிஞரை தொடர்புகொண்டு பேசி ஆளுநரை சந்தித்தோம்.
நீங்கள்(விஜய்) பெரிய நடிகராக இருக்கலாம், 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம், எத்தனையோ பேரை நாங்கள் பார்த்துவிட்டோம். 30 ஆண்டுகளாக பல அரசுகள், முதலமைச்சர்கள், எத்தனையோ தாக்குதல்கள், ரெய்டுகளை பார்த்தவர்கள் நாங்கள். உங்களை மாதிரி நாங்கள் ஓடி ஒளியவில்லை. ஊழலை ஒழிப்பதாகக் கூறும் விஜய், முதலமைச்சர் ஆவதற்கே போலியான ஆவணத்தைக் கொடுக்கிறார். காமராஜர் இருந்த விடியோவே உண்மையில்லை. அது ஏஐயாக இருக்கலாம். தவெகவுக்கு ஆதரவாக காமராஜ் கையெழுத்திட்ட விடியோவின் உண்மைத்தன்மையை வெளியிட முடியுமா?
ஜனநாயக முறைப்படி கட்சிகளிடம் ஆதரவு கேட்கலாம், போலி கடிதம் கொடுத்து எம்எல்ஏவை விடியோ எடுத்து ஏன் முயற்சிக்கிறார்கள்?" என்று தெரிவித்தார்.
எம்எல்ஏ காமராஜ் பேசுகையில், "விஜய்க்கு பெரும்பான்மை இல்லை, அவர் ஏன் ஆட்சியமைக்க முயற்சி செய்ய வேண்டும்? அவரது கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களிடம் ஆதரவு கேட்கலாம். தீயசக்தி திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்களிடம் அதிமுகவிடம் ஏன் ஆதரவு கேட்கிறார்கள்? எப்படியும் முதல்வராக வேண்டும் என்று விஜய் முயற்சிக்கிறார்.
அமமுக ஆதரவு வேண்டும் என்றால் பொதுச் செயலாளரிடம் வந்துதானே பேச வேண்டும்?
விஜய்யைப் பார்த்து நீங்கள் ஒரு பேட்டி எடுக்க முடியுமா? அப்படி விஜய் பேட்டி கொடுத்தால் நான் எம்எல்ஏ பதவியை விட்டு விலகுகிறேன்.
நான் இருந்த விடியோ போலியானது. நான் 25 நாள்களாக தேர்தல் பணியில் இருந்திருக்கிறேன். யாருக்காவது ஏதாவது எழுதியிருப்பேன்" என்று கூறினார்.
Vijay is doing forgery Just to Become Chief Minister: TTV Dhinakaran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.