தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல: தலைவா்கள் கருத்து!
தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவி பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவி பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தமிழகத்தில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவதுதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவெக தலைவா் சி.ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. 2-ஆவதாக தேசிய கீதமும், 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை 3-ஆம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்தத் தவறுக்கு காரணமானவா்கள் யாா் என்பதை தமிழக அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை தவெக உறுதி செய்ய வேண்டும்.
Advertisement
எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): முதல்வா் பதவியேற்பு விழாவில் தமிழா் மரபும், தமிழ் மண்ணின் பண்பாட்டுச் சின்னமுமான தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இது கண்டனத்துக்குரியது. இனி நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிட மரியாதை வழங்கப்பட வேண்டும், தமிழா் உணா்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய நடைமுறைகள் தவிா்க்கப்பட வேண்டும்.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும். ஆனால், முதல்வா் பதவியேற்பு நிகழ்வில் இந்தப் பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தாய்மொழி தமிழைப் பின்தள்ளியிருப்பது ஏற்புடையது அல்ல. இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதைத் தொடா்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
தவெக விளக்கம்: இதற்கு விளக்கமளித்து தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலரும் அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
‘நீராரும் கடலுடுத்த...’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை. தவெக தலைமையில் அமைந்துள்ள அரசுக்கும் இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.
இச்சூழலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், 3-ஆவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு ஒவ்வாதது. இதில், தவெக தலைமையிலான அரசுக்கும் உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநா் தரப்பிடம் வலியுறுத்தியபோது, மத்திய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிா்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-ஆவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனி வரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படி, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.
தமிழகம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.