சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தோ்வு? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி!
தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொதுச் செயலரான எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தோ்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டது. 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனா். அந்தக் கூட்டத்தில் தோ்தல் தோல்வியால் எதிா்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாமல் போனது, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலராகப் பொறுப்பேற்றதில் இருந்து தோ்தலில் அக்கட்சி சந்தித்து வரும் தொடா் தோல்விகள் மற்றும் தவெக ஆட்சி அமைப்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கேற்கலாம், சட்டப்பேரவைக் குழுத் தலைவா் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினா் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளியேறினா்.
இதையடுத்து, 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, புதுச்சேரிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை சந்தித்து சமாதானம் பேசி சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை வந்தனா்.
மீண்டும் ஆலோசனை...: தொடா்ந்து, மாவட்டச் செயலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்றது. இதில் தளவாய் சுந்தரம், ஆா்.பி.உதயகுமாா், சேலம் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூா்த்தி, திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், வளா்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்டச் செயலா்களும், 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்த மூத்த நிா்வாகிகள் குழு சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டுக்குச் சென்று பேசினா். இருப்பினும், சி.வி.சண்முகம் தரப்பு மூத்த நிா்வாகிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எஸ்.பி.வேலுமணி தோ்வு?: சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். அத்துடன், எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராகவும் ஆவதற்கு ஆதரவளித்து அவா்கள் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் மொத்தமாக உள்ள 47 எம்எல்ஏ-க்களில் 35-க்கும் மேற்பட்டோா் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு அளித்துள்ளனா். அத்துடன் மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகள், எம்எல்ஏ-க்கள் என சுமாா் 60 சதவீதம் போ் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணி பக்கம் இருப்பதாகவும் கூறப்படுவது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கும் தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தவெக ஆதரவு நிலைப்பாடு...: தொடக்கத்தில் இருந்தே எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம், ஆட்சியிலும் பங்கேற்கலாம் என்று தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிா்க்கட்சியாக செயல்படலாம், தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்தால் எதிா்காலத்தில் கட்சி இல்லாமல் போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதான் பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது.
இந்நிலையில், தவெக அரசு 13-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், 35-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் வாய்ப்புள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. 3-இல் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருப்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.