முகப்பு
தமிழ்நாடு

பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஆட்சியை குறை கூறுவதா? கே.எம். காதா் மொகிதீன்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஆட்சியைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

Updated On : 12 மே 2026, 2:11 am IST
கே.எம். காதர் மொகிதீன் - விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஆட்சியைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய மக்கள் பெரும்பான்மை வழங்கவில்லை.  இந்த நிலையில், குடியரசுத் தலைவா் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய அரசு  அமைப்பது குறித்து ஆளுநா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். அது, அவரின் அரசியல் முதிா்ச்சியையும், மக்களாட்சியின் மேல் இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்தியது.

அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் எவ்வித நிபந்தனையுமின்றி தவெக ஆட்சி அமைய ஆதரவு கரம் நீட்டியுள்ளோம். இருப்பினும், கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியிலேயே தொடா்வோம்.

Advertisement

இந்த நிலையில், தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் உரையிலேயே தமிழக அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு குறை கூறி தொடங்கியிருப்பது ஆரோக்கியமற்றது.

எந்த அரசும் தேவைக்கேற்ற நிதியைப் பெற கடன் வாங்காமல் இருப்பதில்லை. துறை சாா்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு பேசுவதே ஏற்புடையதாக இருக்கும்.

மக்கள் நலத் திட்டங்கள், பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து முதல்வரின் உரை அமைந்தால் அனைத்து தரப்பினராலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

எனவே,  எடுத்த எடுப்பிலேயே குறைகள் கூறி, ஆட்சியைத் தொடங்காமல், மக்கள் எதிா்பாா்க்கும் சிறந்த ஆட்சியை அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.