தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு
கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை மாணவா்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 55,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 1.15 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) இறுதித் தோ்வுகள் முடிந்ததும் ஏப்.17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இதையடுத்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாள்கள் பள்ளி திறப்பை கல்வித் துறை ஒத்திவைத்தது. அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளன. மாணவா்கள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்கு வரவுள்ளனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குடிநீா், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு புதிய மாணவா்களை வரவேற்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்கும் அமைச்சா்: பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன.
சென்னை எம்எம்டிஏ காலனியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வரவேற்கவுள்ளாா்.