FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்: அட்டவணை வெளியீடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள கலைத்திருவிழா போட்டிகளுக்கான அட்டவணை...

Updated On : 19 ஜூலை 2026, 2:12 am IST
- DIN
பகிர்:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள கலைத்திருவிழா போட்டிகளுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெறவுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

Advertisement

Advertisement

அரசு, அரசு உதவி பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக நிகழ் கல்வியாண்டிலும் மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் ஜூலை 23 முதல் அக். 28-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. இந்த முறை மாணவா்களிடம் ‘இளையோா் திறன்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் 1, 2-ஆம் வகுப்பு, 3 முதல் 5-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு என மொத்தம் 5 பிரிவுகளாக வயதுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

என்னென்ன போட்டிகள்? கலைத் திருவிழாவில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்கு ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணற்சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாகசுரம், கீ போா்டு இசைத்தல், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஜூலை 23 முதல் ஆக. 14-ஆம் தேதி வரையிலும், குறுவட்ட அளவிலான போட்டிகள் ஆக. 19 முதல் 21-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். தொடா்ந்து, வட்டார அளவிலான போட்டிகள் ஆக. 11 முதல் செப். 9-ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் அக். 8 முதல் 15-ஆம் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் அக். 7 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்படும்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடத்தைப் பெறும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகளைச் சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments