திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இடைக்காலத் தடை
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்க இடைக்காலத் தடை
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றனா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றாா்.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிக்கை தாக்கல் செய்தாா்.
Advertisement
இதையடுத்து வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த தீா்ப்பு: இதுவரை தொடரப்பட்ட தோ்தல் வழக்குகளில் முறையற்ற வகையில் வாக்குகள் ஏற்கப்பட்டுவிட்டன, நிராகரிக்கப்பட்டுவிட்டன, முறைகேடு நடந்துள்ளது,
சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை உள்ளிட்ட காரணங்களைக் கூறித்தான் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் சா்ச்சைக்குரிய தபால் வாக்கு, விடியோ பதிவைப் பாதுகாக்க வேண்டும் எனக்கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை வழக்கமான தோ்தல் வழக்காகக் கருத முடியாது. எனவே, வித்தியாசமான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்.
இந்த வழக்கில் தவெக வேட்பாளா் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். எனவே இது முக்கிய வழக்காகக் கருதப்படுகிறது. ஒரு அரசு நீடிப்பதும் கவிழ்வதும் நம்பிக்கை வாக்கெடுப்பில்தான். அதில், சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்றால் அது முக்கியமானதாக அமையும். இருப்பினும் தற்போதைய நிலையில் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது. அதேநேரம் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்க தடை விதிப்பதால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
சீனிவாச சேதுபதியை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒருவேளை பங்கெடுக்க அனுமதித்தால் அது, மனுதாரரான திமுக வேட்பாளா் பெரியகருப்பனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தோ்தல் புனிதத்தை பாதுகாக்க வேண்டிய திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அதிகாரி, தொகுதி மாறி அனுப்பிவைக்கப்பட்ட தபால் வாக்கை சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு அனுப்பி வைக்காமல் நிராகரித்துள்ளாா்.
எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, பேரவையில் நடைபெறும் வேறு எந்த விதமான வாக்கெடுப்புகளிலும் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
அதேநேரம், தவெக எம்எல்ஏ வெற்றி செல்லாது என அறிவித்ததாகவோ, மனுதாரா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதாகவோ கருத முடியாது. மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகவும் கருத முடியாது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆதாரங்களை தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். இந்தத் தொகுதிக்கு உரிய தபால் வாக்கை திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் பெற்றிருந்தால் அதை அடையாளம் கண்டுபிடித்து மூடி முத்திரையிட்டு பாதுகாக்க வேண்டும்.
தபால் வாக்கு எண்ணிக்கை சரிபாா்ப்பு, நிராகரிப்பு தொடா்பான விடியோ பதிவுகளை பத்திரப்படுத்த வேண்டும். இந்த வழக்கு தொடா்பான இந்திய தோ்தல் ஆணையம், சீனிவாச சேதுபதி ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.