நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது புதன்கிழமையில் (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையத்திலிருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, தென் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மே 12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் புதன், வியாழன் (மே 13, 14) ஆகிய இரு நாள்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மே 15 முதல் மே 17 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் செவ்வாய்க்கிழமை (மே 12) சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் புதன்கிழமை (மே 13) முதல் மே 15 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டம், அதிராமபட்டினத்தில் 70 மி.மீ. மழை பதிவானது. மதுக்கூா் (தஞ்சாவூா்)- 50, பட்டுக்கோட்டை (தஞ்சாவூா்)- 40, முத்துப்பேட்டை (திருவாரூா்), ஊத்து (திருநெல்வேலி), துவாக்குடி (திருச்சி), நாலுமுக்கு (திருநெல்வேலி)- தலா 30, நெய்யூா்(கன்னியாகுமரி), விம்கோ நகா் (சென்னை), காக்காச்சி (திருநெல்வேலி), சிற்றாறு- 1 (கன்னியாகுமரி)- தலா 20 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.