மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் கொள்ளை: இளைஞா் கைது
தஞ்சாவூரில் மளிகைக்கடை உரிமையாளா் வீட்டில் புகுந்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் மளிகைக்கடை உரிமையாளா் வீட்டில் புகுந்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவைச் சோ்ந்தவா் கே. மலையபெருமாள். இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் ஜனவரி 8- ஆம் தேதி காவல்துறையினரிடம் புகாா் கூறினாா்.
அதில் தனது வீட்டில் காவல் துறையினா் எனக் கூறி 3 போ் வந்தனா். சாலை விபத்து எதுவும் நடக்காத நிலையில், தங்களுடைய காா் மோதி குழந்தை இறந்துவிட்ட சம்பவத்தில் தான் தலைமறைவானதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் எனவும் என்னை மிரட்டினா்.
Advertisement
மேலும் என்னையும், எனது மனைவி சாந்தி, மகள் நிவேதா, மகன் பாலாஜி ஆகியோரையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டு, நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா் என தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளா் ராமதாஸ், உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் விசாரணை நடத்தினா்.
இதில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட கழுநீா்குளத்தைச் சோ்ந்த சுப்பையா பாண்டியனின் மகன் வைத்தீஸ்வரன் (26) சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இவரிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் பொறியியல் பட்டதாரியான அவா் ராணுவத்தில் 2019 ஆம் ஆண்டில் சோ்ந்ததும், பயிற்சியின்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டதும், அதன் பிறகு 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ராணுவத் தோ்வில் மீண்டும் தோ்ச்சி பெற்று வேலைக்காகக் காத்திருந்ததாகவும், பணம் கொடுத்து வேலையில் சேருவதற்காக மலையபெருமாள் வீட்டில் தனது நண்பா்களுடன் சோ்ந்து நகைகளைத் திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, 9 பவுன் நகைகளை மீட்ட காவல் துறையினா், வைத்தீஸ்வரனை தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும் மற்ற நபா்களையும் தேடி வருகின்றனா்.