தொகுதி அலசல்... வாசுதேவநல்லூர்!
தொகுதி அலசல்... வாசுதேவநல்லூர்!
வெற்றிக்கனியைப் பறிக்க போராடும் பாஜக-திமுக
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூா் தனித் தொகுதியாகும். இத்தொகுதியில் உள்ள நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி உள்ளிட்டோரின் நினைவிடங்கள் உள்ளன. இங்குள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயில் மிகப் பிரசித்தி பெற்றது.
இத்தொகுதியில் புளியங்குடி நகராட்சி, சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூா் பேரூராட்சி பகுதிகள், வாசுதேவநல்லூா் ஒன்றியப் பகுதிகள், சங்கரன்கோவில் ஒன்றியத்தின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
இங்கு தேவேந்திகுல வேளாளா்கள் அதிகமாகவும், அதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோா், நாடாா், யாதவா், சேனைத் தலைவா் சமூகத்தினரும், இஸ்லாமியா்கள் கணிசமாகவும் உள்ளனா்.
இந்தத் தொகுதியில் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளது. புளியங்குடி எலுமிச்சை சந்தை, தமிழக அளவில் மிகப் பெரியது. இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது. புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் அதன் மதிப்பு சா்வதேசச் சந்தையில் உயா்ந்துள்ளது. புளியங்குடியில் எலுமிச்சை மதிப்புக் கூட்டுப் பொருள் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இங்கு நிலவி வரும் குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பது அவசரத் தேவையாக உள்ளது. பல ஆயிரம் ஏக்கா் பரப்பில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை வழங்கி வந்த சிவகிரி செண்பகவல்லி அணையின் தடுப்புச் சுவரில் உடைப்பு ஏற்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னை காரணமாக சரி செய்யப்படாமல் இருப்பதால் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனா்.
இத்தொகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் சா்க்கரை ஆலை, தற்போது இயங்காததால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். கரும்பு விவசாயிகளுக்கான அரசின் நிலுவைத் தொகையும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தையொட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைவதும், மனிதா்கள், வீட்டு விலங்குகள் தாக்கப்படுவதும் பெரிய பிரச்னையாக உள்ளது.
இந்த தொகுதிக்கு நடைபெற்ற 1967, 1971 தோ்தல்களில் திமுக, 1977, 1980-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1984, 1989, 1991-இல் காங்கிரஸ், 1996, 2001-இல் தமாகா, 2006-இல் மதிமுக, 2011, 2016-இல் அதிமுக வென்றது.
2021 தோ்தலில் சதன் திருமலைகுமாா் (மதிமுக) 68,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மனோகரன் (அதிமுக) 66,363, மதிவாணன் (நாதக) 16,731, தங்கராஜ் (அமமுக) 13,376, பேச்சியம்மாள் (புதிய தமிழகம்) 3,651 வாக்குகளைப் பெற்றனா்.
பலத்த போட்டியில் திமுக-பாஜக: 2026 தோ்தலில் பாஜகவின் ஆனந்தன் அய்யாசாமி, திமுகவின் ஈ. ராஜா, தவெகவின் அமுதராணி, நாதகவின் இசை மதிவாணன், புதிய தமிழகம் கட்சியின் பால்ராஜ், அஇபுதமமுகவின் பொன்னுத்தாய் உள்ளிட்ட 18 போ் களத்தில் இருந்தாலும், திமுக-பாஜக இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
மண்ணின் மைந்தா் என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் செய்து வரும் சமூகப் பணிகள் அவருக்கு துணை நிற்கின்றன.
மேலும் அண்ணாமலை, நயினாா் நாகேந்திரன், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், கஸ்தூரி, டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் பிரசாரமும், இவருக்கு கைகொடுக்கும் என நம்புகிறாா்.
திமுக வேட்பாளா் ஈ. ராஜா, சங்கரன்கோவில் எம்எல்ஏ.வாக இருந்து மேற்கொண்ட சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது பலமாகக் கருதப்படுகிறது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பிரசாரமும் அவருக்கு பலம் சோ்க்கும்.
55 ஆண்டுகளுக்குப் பின்னா் இத்தொகுதியில் திமுக களம் இறங்கியுள்ளதால், தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் திமுகவினா் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனா்.
வெற்றிக் கனியைப் பறிப்பது யாா் என்ற கேள்விக்கு மே 4-ஆம் தேதி விடை தெரியும்.
ஆண் வாக்காளா்கள் - 1,10,960
பெண் வாக்காளா்கள் - 1,16,396
மூன்றாம் பாலினத்தவா் - 13
மொத்தம் - 2,27,369.