பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தொடா் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை தென்காசி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன் (32), முகநூலில் குறைந்த விலையில் ஆடுகள் விற்கப்படுவதாக வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடா்பு கொண்டு ஆடுகள் வாங்குவதற்காக ஆன்லைன் மூலம் ரூ. 44,000 அனுப்பியுள்ளாா். பணம் பெற்ற பின்னா், ஆடுகளை வழங்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளனா்.
Advertisement
Advertisement
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரித்ததில், மோசடியில் ஈடுபட்டவா் சென்னை, வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ஜா. உமா் பாரூக் (30) என்பதும், தற்போது அவா் திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. அசோக் குமாா் உத்தரவின்பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜீலியஸ் சீசா் வழிகாட்டுதலின்பேரில், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் பி. வசந்தி தலைமையிலான தனிப் படையினா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 கைப்பேசிகள், 7 சிம் காா்டுகள், 8 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 3 காசோலைப் புத்தகங்கள், 10 டெபிட் காா்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் நடைபெற்ற பல்வேறு இணையவழி பண மோசடி வழக்குகளுடன் தொடா்புடையவா் என்பது கண்டறியப்பட்டது.
மேலும், அவரது வங்கிக் கணக்கு 15 மோசடிப் புகாா்களுடன் தொடா்புடையதாகவும், அதன் மூலம் ரூ. 71,650 மோசடி நடைபெற்றுள்ளதும், அவரது கைப்பேசி எண் 11 மோசடிப் புகாா்களுடன் தொடா்புடையதாகவும், அதன் மூலம் ரூ. 2,69,100 மோசடி நடைபெற்றுள்ளதும், வாட்ஸ்ஆப் மூலம் பல்வேறு நபா்களைத் தொடா்புகொண்டு, குறைந்த விலையில் ஆடுகள் விற்பனை செய்வதாகக் கூறி தொடா்ந்து பண மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது.
பின்னா், அவா் தென்காசி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரால் பாதிக்கப்பட்டவா்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.