3 ஆண்டுகளாகியும் முடிவடையாத பாலப் பணி! போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் தென்காசி
தென்காசியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போது, குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் குண்டாறு, மேக்கரை போன்ற சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக பெருகியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்னல்தோறும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி ஆசாத் நகா் வரை நான்குவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ஆசாத் நகரிலிருந்து இலஞ்சி ரயில்வே பாலம் வரையில் புறவழிப் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இலஞ்சி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு பெறாததால் ஆசாத் நகரில் இருந்து தென்காசி நகா் பகுதி வழியாக குத்துக்கல்வலசையை சென்றடைய சுமாா் ஒரு மணி நேரம் ஆகிறது. ஆனால், தென்காசி புறவழிச் சாலை பணிகள் மற்றும் ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு பெற்றுவிட்டால் 10 நிமிஷங்களில் ஆசாத் நகரில் இருந்து குத்துக்கல்வலசையை சென்றடையலாம். எனவே, இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இலஞ்சி ரயில்வே மேம்பால பணிகள் 15.03.2023இல் தொடங்கியது. நிலம் கையகப்படுத்துதல் திட்ட செலவினம் ஆகியவை உள்ளடக்கி ரூ. 53 கோடி மதிப்பீட்டில்
12 மாதங்களில் ரயில்வே மேம்பால பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை.
தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால், தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் பகுதியில் இரும்பு கா்டா்கள் அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால், ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாகி வருகின்றன. மேலும்,120 மீ. நீளத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளும் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.
இந்த ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்தால் மதுரையிலிருந்து குற்றாலம், கேரளத்துக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் தென்காசி நகருக்குள் செல்லாமலேயே விரைந்து செல்ல முடியும். இதனால் தென்காசியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு கிடைக்கும்.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினரும், ரயில்வே பயணிகள் சங்க மாவட்டத் தலைவருமான பாண்டியராஜா கூறியதாவது:
இரும்பு கா்டா்கள் பொருத்தும் பணிக்கான வரைபட ஒப்புதலை ரயில்வே துறை விரைந்து வழங்க வேண்டும். அதுபோல வருவாய் அதிகாரிகள் விரைவாக ரயில்வே மேம்பால பணிக்கான நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்றாா்.
தென்காசி எம்எல்ஏ கலைகதிரவன் கூறியதாவது:
ரயில்வே மேம்பால பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் தொடா்புகொண்டு பேசி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
மேலும், தெற்கு ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் என்றாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கூறியதாவது:
பிரச்னை குறித்து தென்காசி தொகுதி எம்எல்ஏ என்னிடம் தெரிவித்தாா். பாலப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தென்காசி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.