முகப்பு
திருவள்ளூர்

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:50 AM
ரமேஷ், கபிலன்
பகிர்:

திருவொற்றியூரில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சென்னை திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த கபிலன் (23). இவா் தனது வீட்டின் அருகே உள்ள 13 வயது சிறுமியிடம் வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வருமாறு கூறி, கடத்தி சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருவொற்றியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு பின் கபிலனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Advertisement

அதைத் தொடா்ந்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா். இதைத்தொடா்ந்து இந்த வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் புவனேஸ்வரி ஆஜரானாா்.

இந்த வழக்கு விசாரணையில் இறுதியாக போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பாக வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கபிலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 9 ஆண்டுகள் சிறை:

திருவொற்றியூரில் 3 சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சென்னை திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). இவா் கடந்த 2021 இல் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது, 9 வயது, 15 வயது உள்ளிட்ட 3 சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளாா். அந்த சிறுமிகளின் பெற்றோா்கள் இதுகுறித்து திருவொற்றியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் ரமேஷை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். அதையடுத்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பாக வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதைத் தொடா்ந்து திருவொற்றியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரமேஷை சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.