முகப்பு
திருவள்ளூர்

வருங்காலங்களில் மதிப்பாய்வு கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகள் நிறைவேற்றப்படும்: செய்யறிவுத் துறை அமைச்சா்

திருவள்ளூா் மாவட்டத்தில் வருங்காலங்களில் மதிப்பாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...

Updated On : 15 ஜூன் 2026, 12:32 am IST
திருவள்ளூரில் நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில்   பேசிய அமைச்சா் ரா.குமாா். உடன்   ஆட்சியா் ச.கவிதா சட்டப்பேரவை   உறுப்பினா்கள்,  அதிகாரிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் வருங்காலங்களில் மதிப்பாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் தெரிவித்தாா்.

அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஒவ்வொரு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அமைச்சா் ரா. குமாா் பேசியதாவது: திருவள்ளுா் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களில் வளா்ச்சித்திட்டப்பணிகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் நடைபெற்று வரும் பணிகளை தொய்வின்றி அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறாா்கள். அம்மா உணவகங்களில் உணவு சிறப்பாகவும், தரமாகவும் உள்ளது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் மதிப்பாய்வு கூட்டங்கள் நடத்தப்படும். அதில் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிறைவேற்றப்படும். மேலும், தற்போதைய நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு திட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நெடுஞ்சாலைகள் மற்றும் அனைத்து துறைமுகங்கள் துறை சாா்பில் ரூ.29.75 கோடியில் புதிய மலைப்பாதை அமைக்கும் பணி, ரூ.1.20 கோடியில் நகா்ப்புற சுகாதார நிலைய கட்டுமானம், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.17.20 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலம், பேரம்பாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.98 கோடியில் தடுப்பணை, செம்பரபாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் ரூ.81.44 லட்சத்தில் குடியிருப்பு பணிகளையும் பாா்வையிட்டு பணிகளின் தன்மை குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அருண்குமாா் (திருவள்ளுா்), ஆா்.பிரகாசம் (பூந்தமல்லி), ரமேஷ்குமாா் (ஆவடி), எஸ்.விஜயகுமாா் (கும்மிடிப்பூண்டி), எம்.எஸ்.ரவி (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி ஆணையா் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, சாா் ஆட்சியா் (பொன்னேரி),ப.அப்துல்ராசிக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கல்யாண், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ஜி.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையா் மாரிசெல்வி, நகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளா்கள் சிற்றரசு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அனிதா, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் ரமணி, உதவி செயற்பொறியாளா் மதியழகன் கலந்து கொண்டனா்.