முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே விவசாயி பெற்ற பயிா்க் கடனுக்காக அவரது மகனின் நகையை ஏலம் விடுவதாக அறிவித்த வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் சாா்பில் முற்றுகைப் போராட்டம்

Updated On : 5 ஜனவரி 2021, 2:00 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே விவசாயி பெற்ற பயிா்க் கடனுக்காக அவரது மகனின் நகையை ஏலம் விடுவதாக அறிவித்த வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குண்டடம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள வங்கிக் கிளையில் பொன்னுசாமி என்ற விவசாயி தனது சொத்துப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் பயிா்க் கடன் பெற்றிருந்தாா். அதே வங்கியில் அவரது மகன் நல்லுசாமி நகையை அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இந்நிலையில், நல்லுசாமி தனது நகையை மீட்க வங்கிக்குச் சென்றபோது அவரது தந்தையின் கடனை செலுத்தினால் மட்டுமே நகையைத் திருப்பிக் கொள்ள முடியும் என்றும், இல்லாவிட்டால் ஜனவரி 12ஆம் தேதி நகை ஏலத்தில் விடப்படும் என்றும் வங்கி நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதன்படி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வங்கியை முற்றுகையிட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கம், காவல் துறை உயா் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், நல்லுசாமி வங்கியில் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்தினால் நகையைத் தருவதாக உறுதியளித்தனா். மேலும், அவரது தந்தை வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து அசல் தொகையை செலுத்தி பத்திரத்தை மீட்டுக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்துள்ளனா். இதன்பேரில் போராட்டத்தைக் கைவிடுவதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.